Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ரஜினி செய்யவில்லை... அஜித் செய்வாரா?' - வலுக்கும் எதிர்பார்ப்பு

`முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் வெளியாகும்போது, அவர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வழக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, தங்கள் படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்க வளாகங்களில் பத்து நாள்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்புதான முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புஉணர்வு முகாம் நடத்தி, ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி செய்யாததை நடிகர் அஜித் செய்வாரா?' என்று வித்தியாசமான கோரிக்கையை வைத்திருக்கிறது, தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச் சங்கம். 

 'நல்ல கோரிக்கையாக இருக்கிறதே' என்று அந்தச் சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் பேசினோம்.
 அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை``உங்களுக்கு வேண்டுமானால், இந்தக் கோரிக்கை புதுமையாக இருக்கலாம். ஆனால், நாங்கள் இந்தக் கோரிக்கையை 2016-ம் ஆண்டிலிருந்தே வலியுறுத்திவருகிறோம். ஏனெனில், இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளாலும், பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்கும் என, இரண்டு விநாடிகளுக்கு ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், ரத்ததானம் குறித்த போதிய விழிப்புஉணர்வு நம்மிடையே இன்னும் ஏற்படாததால், `நாள் ஒன்றுக்கு, சுமார் நான்கு கோடி யூனிட் ரத்தம் மட்டுமே தானமாகக் கிடைப்பதாக' மருத்துவத் துறை தெரிவிக்கிறது. ரத்தப் பற்றாக்குறையால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் மருத்துவ உலகம் திணறிவருகிறது. 

இது ஒருபுறம் இருக்க, அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக புகையிலைப் பொருள்களைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிப்பதோடு மட்டுமின்றி, மது விற்பனையையும் அரசே ஏற்று நடத்திவருவதால், புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களை உற்பத்தி செய்யும் அரசுகளாக மத்திய-மாநில அரசுகள் இருக்கின்றன. அதனால் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசுகளே அந்த வஸ்துகளை விற்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுவருவதால், அவை அந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் என நாம் நம்ப முடியாது. அதேபோல், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் சொன்னாலும் எடுபடாது. அதனால், பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் இந்த விழிப்புஉணர்வை முன்னெடுத்துச் சென்றால் பலன் கிடைக்கு என நினைத்தோம்.

முதல் கட்டமாக, 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் `கபாலி' படம் வெளிவர இருந்ததால், முதலில் ரஜினி ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகளான சுதாகர் மற்றும் சத்தியநாராயணா ஆகியோரை 06.07.2016 அன்று சந்தித்து, எங்களது கோரிக்கையைக் கடிதமாகக் கொடுத்தோம். நாங்கள் வைத்த கோரிக்கையை, ரஜினி அவர்கள் தன் ரசிகர்களுக்கு அறிக்கையாக வெளியிடவும் கேட்டுக்கொண்டோம். அப்போது எங்களிடம் பேசிய இருவரும், `அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் சூப்பர்ஸ்டார் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்று, ஓரிரு நாளில் நல்லதோர் அறிவிப்பை வெளியிடுகிறோம்' என்று வாய்மொழியாக உத்தரவாதம் தந்தார்கள்.

நாள்கள் பல கடந்தன. `கபாலி' படமும் வெளியானது. ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை.   இருந்தாலும், மனம் தளராத நாங்கள், அப்படியே நின்றுவிடாமல் எங்களது கோரிக்கையை அனைத்து நடிகர், நடிகைகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை, 20.07.2016 அன்று அவர்களது அலுவலகத்தில் சந்தித்து வழங்கினோம். அப்போது, `உங்கள் கோரிக்கையை நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் முன்வைத்து விவாதித்து, அதன் பிறகு முடிவைத் தெரிவிக்கிறோம்' என்றார்கள். அவர்கள் சொன்னதுபோலவே 14.08.2016 அன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் எங்களது கோரிக்கையை முன்வைத்து விவாதம் நடத்திய பிறகு, அதன் சாராம்சத்தை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் அனுப்பிவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் விவரத்தை, சங்கப் பொதுச்செயலாளர் விஷாலின் கையொப்பமிட்டக் கடிதத்தை 19.08.2016 எங்களுக்கு அனுப்பிவைத்தார்கள்.

ஆனால், லட்சக்கணக்கான ரசிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தோ, பிற நடிகர்களோ எங்களது கோரிக்கை குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எங்களது கோரிக்கையைக் கேள்விப்பட்ட தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., 2016-ம் ஆண்டு தனது நடிப்பில் `ஜனதா கேரேஜ்' திரைப்படம் வெளியாக இருந்த சூழலில், `என் ரசிகர்கள் எவரும்  என்னுடைய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது' என்ற அறிவிப்பை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழக நடிகர்கள் அனைவரும் புறக்கணித்தபோது, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் அதில் ஒரு பகுதியையாவது செயல்படுத்திட முன்வந்தது ஓரளவுக்கு மனநிறைவை தந்தது. 

இந்தச் சூழலில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள `விவேகம்' திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருப்பதால், மேற்கண்ட எங்களின் கோரிக்கையை நாங்கள் அஜித் கவனத்துக்கு நேரில் கொண்டுசெல்ல முயற்சித்தோம். ஆனால், அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி, நேரில் சந்திக்க அனுமதி தரவில்லை. அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும்கூட, அவரின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால், எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மூன்று பக்கக் கடிதத்தை பதிவுத் தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பியிருக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் செய்ய முன்வராத மக்கள் நலன் சார்ந்த விஷயத்தில், அஜித்தாவது நல்லதோர் அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை நலப்படுத்துவதோடு, அவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட முன்வர வேண்டும். இல்லையென்றால், நடிகர்கள், தங்கள் ரசிகர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற மனபாவத்தோடும் அவர்களை வைத்து தங்கள் சினிமா வருமானத்துக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவும், ரசிகர் மன்றம் வைத்து தங்களுக்கு போஸ்டர் ஒட்ட வைக்கவும் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள் என்ற பிம்பம் உண்மையாகிவிடும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement