சாலை விதிகளை மீறிய 521 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து: ராமநாதபுரம் எஸ்.பி. தகவல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 521 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓம்பிரகாஷ்மீனா கூறியபோது ''ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களின்போது ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் பொருட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், பயணிகள் வாகனத்தில் கூடுதலாக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், கை பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 1.7.2017 முதல் 31.7.2017 வரையில் நடந்த வாகனச் சோதனையின்போது வாகன விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுநர்கள்மீது 2,10,616 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 763 வாகன ஓட்டுநர்களின் உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதில் 521 ஓட்டுநரின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 242 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிக நிறுத்தம் செய்ய வேண்டிய நிலையிலும் உள்ளது’ என்றார்.

எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா

 

மேலும், காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ‘இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும். வாகனங்களின் எண் பலகையில் தெளிவாக இருத்தல் வேண்டும். இவை தவிர வேறு படங்களோ அல்லது வாசகங்களோ வாகனங்களில் இருக்கக் கூடாது. முக்கியமாக வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக கைபேசியில் பேசிக்கொண்டே செல்லக்கூடாது. வாகனங்களை ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், காப்பீடு, வாகன அனுமதி போன்ற ஆவணங்களைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் தினசரி வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!