அ.தி.மு.க. பிரமுகருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

  

கரூர் மாவட்டம், பெரியக்குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள் இன்று காலை முதல் அதே கிராமத்தைச் சேர்ந்த கரூர் நகர அ.தி.மு.க அம்மா பேரவைச் செயலாளர் செல்வராஜ் (எ) மகேஷ்செல்வத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

போராட்டம் குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "எங்க ஊர்ல இருக்கிற ருக்மணி சமேத பண்டரிநாதன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. அந்த கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மகேஷ்செல்வம் வீடு கட்டி வருகிறார்.அந்த வழியாகச் செல்லும் கழிவுநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி, கோயில் இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பிவிட்டார். யு.டி.ஆர். ஆவணங்கள் அனைத்திலும் 'அது கோயிலுக்குச் சொந்தமான, மக்கள் பயன்படுத்தும் பாதை' என்றுதான் உள்ளது. வி.ஏ.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளும் இதையேதான் கூறினார்கள். அதனால், அந்த இடத்தை மீட்பதற்காக பலமுறை ஊர்க்கூட்டம் போட்டு பேசி, மகேஷ்செல்வனையும் அழைத்தோம். அவர் ஒரு கூட்டத்துக்கும் வரவில்லை. அதனால், மத்தியஸ்தர்களை வைத்து, அவரிடம் பேசிப் பார்த்தோம். அவர் அதுக்கு,'முடிஞ்சதைப் பாருங்க'ன்னு சொல்லிட்டார். காவல்நிலையத்துல புகார் கொடுத்தோம். அவங்க, 'இது சிவில் கேஸ்'ன்னு மறுத்துட்டாங்க. 'சரி போராட்டம் நடத்த அனுமதி தாங்க'ன்னு கேட்டோம். அதுக்கும் முதல்ல மறுத்துட்டாங்க. இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவே கஷ்டப்பட்டுதான் அனுமதி வாங்கினோம். அதுவும், மைக்செட் கட்ட அனுமதி தரலை. எப்படியும்,கோயிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை மகேஷ்செல்வத்துகிட்ட இருந்து மீட்டேத் தீருவோம்" என்று ஆவேசமாகச் சொல்கிறார்கள் மக்கள்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள், வித்தியாசமான இசைக்கருவிகளை வைத்து பஜனைப் பாடல்கள் பாடி வருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!