வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (06/08/2017)

கடைசி தொடர்பு:18:23 (23/07/2018)

ராமேஸ்வரத்தில் உயிருடன் பிடிபட்ட கடல் அட்டைகள்

ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வைத்திருந்த ஒருவரை வன உயிரின காப்பக அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் இருந்து கைபற்றப்பட்ட உயிருள்ள அட்டைகள் பாம்பன் கடலில் விடப்பட்டன.

பாக்நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அருகி வரும் அரிய கடல் வாழ் உயிரினங்களை  மீனவர்கள் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் கடல் அட்டையும் ஒன்றாகும் இதனால் கடல் அட்டைகளைப் பிடிப்பது குற்றமாகும். இலங்கை, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடல் அட்டைக்கு அதிக விலை கிடைப்பதால் சிலர் கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்து அவற்றை கள்ளத்தனமாக கடத்தி வருவது வழக்கமாக உள்ளது.

பாம்பன் கடலில் விடப்பட்ட உயிருடன் பிடிபட்ட கடல் அட்டை

இந்நிலையில், மண்டபம் வன உயிரின காப்பக அதிகாரிகள், வனவர் சதீஷ் தலைமையில் ராமேஸ்வரம் கெந்தமாதன பருவதம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அங்கே காய்ந்த நிலையில் 8 கிலோ கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் முனியசாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மேலும் 20 கிலோ கடல் அட்டைகள் உயிருடனும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றைக் கைப்பற்றிய வன உயிரின காப்பக அலுவலர்கள் முனியசாமியைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

பின்னர், முனியசாமி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 20 கிலோ உயிருடன் கூடிய கடல் அட்டைகள் பாம்பன் கடல் பகுதியில் விடப்பட்டன. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.