'தினகரனுக்கும் எங்களுக்கும் பங்காளிச் சண்டை'- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! | ADMK will unite, says Minister Sreenivaasan

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:35 (07/08/2017)

'தினகரனுக்கும் எங்களுக்கும் பங்காளிச் சண்டை'- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

    

வரும் 16-ம் தேதி, கடலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். வழக்கம்போல், எம்.எல்.ஏ-க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், எம்.பி-க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி ஆகியோர் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதை ஆலோசனைக் கூட்டம் என்பதைவிட, சமாதானக் கூட்டம் என்றுதான் அ.தி.மு.க வட்டாரத்தில் கூறுகின்றனர். இதற்கு முன்னர், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன், எம்.பி, எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனராம். அதற்கு அவர்கள் கறாராக மறுப்பு தெரிவித்துவிட்டார்களாம். இக்கூட்டத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகமும் வருவதாக கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், சி.வி.சண்முகத்துக்கும் ஏற்கெனவே மோதல் போக்கு நிலவி வருவதால், இக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.


    

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "எங்களுக்கும் தினகரனுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கும் நடப்பது உட்கட்சி பூசல். எல்லாமே நாளடைவில் சரியாகிவிடும்" என்றார்.