வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:27 (07/08/2017)

''மூன்று அணிகளையும் இணைக்க ஊடகங்கள் உதவ வேண்டும்!''- அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை 

அமைச்சர் செல்லூர் ராஜு செயல்படுத்துகிற திட்டங்கள் மட்டுமல்ல, பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் பரபரப்பான செய்தியாகி விடுகிறது.  இன்று மதுரை மாவட்டம் துவரிமான் ஊராட்சியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அ.தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.

செல்லூர்ராஜு

கிருதுமால் நதியின் மீது பாலம் கட்ட நாற்பது லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், பயனாளிகளுக்கு 7.50 லட்ச ரூபாயில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா வழியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் மூன்று அணிகளாக பிரிந்திருந்தாலும் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவோம். மூன்று அணிகளும் இணைவதற்கு ஊடகங்கள் உதவி செய்யவேண்டுமே தவிர அதை பெரிதுபடுத்தக் கூடாது'' என்று பேசி விட்டுச் சென்றார். 

ஆரம்பத்தில், 'எங்கள் கட்சியில் அணிகளே இல்லை' என்று பேசிய செல்லூர் ராஜு, பிறகு 'கட்சியும், ஆட்சியும் எடப்பாடியிடம்தான் உள்ளது' என்று சொன்னார், இன்று மூன்று அணிகள் இருப்பதாக கூறி அதை ஒற்றுமைப்படுத்தும்படி ஊடகங்களிடம் கோரிக்கை வைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்  செல்லூர் ராஜு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க