காதலனோடு சென்ற மகள்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை | A family committing suicide for daughter got married to her lover

வெளியிடப்பட்ட நேரம்: 00:03 (07/08/2017)

கடைசி தொடர்பு:07:38 (07/08/2017)

காதலனோடு சென்ற மகள்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

சேலம் மாவட்டத்தில் மகள் அவரது காதலனோடு சென்றுவிட்டதால் அப்பா, அம்மா, தங்கை, தம்பி என 4 பேரும் விஷம் அருந்தி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்தது தாண்டானூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு மோகனா, ஆர்த்தி என இரண்டு மகள்களும் நவீன்குமார் என்ற ஒரு மகனும் உள்ளார். ராஜேந்திரனின் மூத்த மகள் மோகனா கடந்த 3-ம் தேதி தன் காதலன் மணியோடு வீட்டை விட்டு ஓடிப் போனதால் அப்பா, அம்மா, தங்கை, தம்பி என 4 பேரும் விஷம் அருந்தி இறந்து விட்டார்கள். இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மரணம் அடைந்த ராஜேந்திரனின் உறவினர் முத்துலிங்கம் தெரிவித்ததாவது, ''ராஜேந்திரனுக்குச் சொந்தமாக சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கஷ்டப்பட்டு உழைத்து 3 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார். மோகனாவும், ஆர்த்தியும் சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் படித்தார்கள். ஆர்த்தி அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். மோகனா கடந்த ஆண்டு பி.ஏ.,இங்கிலீஸ் படித்து முடித்துவிட்டார். நவீன்குமார் ஈரோடு ஐ.டி.எல். பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.

மோகனாவின் பெரியம்மாள் மகன் கனி மூலமாக சிங்கிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி என்ற பையனோடு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மணியும் மோகனாவும் காதலித்து இருக்கிறார்கள். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து இருக்கிறார்கள். கடந்த 3-ம் தேதி ஆடிப் பெருக்கு அன்று விடியற்காலை 5 மணிக்கு வீட்டுக்குத் தெரியாமல் மோகனா தன் பெரியம்மாள் மகன் கனியின் உதவியோடு மணியுடன் சென்றுவிட்டார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

 3-ம் தேதி காலை ராஜேந்திரன் பல இடங்களில் சுற்றிப்பார்த்தும் மோகனாவைக் காணவில்லை என்பதால் ஏத்தாபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தேகத்தின் பேரில் தன் மனைவியின் அக்காள் மகன் கனியிடம் ராஜேந்திரன் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதற்கு கனி, 'நான்தான் உன் பிள்ளையைக் கூட்டிட்டு போய் திருமணம் செய்துவைத்தேன். உன்னால் செய்ய முடிந்ததைச் செய்'' என்று சவால் விட்டுள்ளார். 

ஆனாலும் தன் மகள்மீது இருந்த நம்பிக்கையில் அவள் திருமணம் செய்திருக்கமாட்டாள் என்றே புலம்பிக் கொண்டிருந்தார். 5-ம் தேதி மாலை மோகனா தன் வீட்டுக்கு போன் செய்தார். அப்போது அவர்,  'நான் மணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன்' என்று சொன்ன பிறகு விரத்தி அடைந்த ராஜேந்திரன் குடும்பத்தோடு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை ராஜேந்திரனின் அண்ணி வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது 4 பேரும் விஷம் அருந்தி மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது'' என்று தெரிவித்துள்ளார்.