அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பேர் கைது

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில், அமர்நாத் யாத்ரீகர்கள்மீது கடந்த மாதம் 10-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக  மூன்று பேரை, மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

அமர்நாத்

பால்தள் அடிவார முகாமிலிருந்து யாத்ரீகர்களுடன் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தைக் குறிவைத்து நான்கு தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்  எட்டு யாத்ரீகர்கள் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், 

இந்தத் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்த அபு இஸ்மாயில் மூளையாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

பிலால் ரேஷி, ஐஷாஸ் வாகே, ஜாகுர் அகமது ஷேக் என்று மூவரையும் கன்னாபால் என்ற இடத்துக்கு அருகே கைதுசெய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனந்தநாக் காவல்துறை ஐ.ஜி. முனிர்கான் கூறுகையில், தற்போது கைதுசெய்யப்பட்ட நபர்கள், லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான வாகனங்கள், தங்குமிடம் போன்றவற்றை அளித்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மேலும் இருவரைத் தொடர்ந்து தேடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

பஷிர் லஷ்காரி என்ற லஷ்கர் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் கொல்லப்பட்டதற்குப் பழிதீர்க்கும் வகையில், அமர்நாத் யாத்ரீகர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!