'ரிசல்ட் கொடுப்பதற்குள் நாங்கள் செத்துவிடுவோம்'- டெங்கு பீதியில் மதுரை மாவட்ட மக்கள்

மேலூர் மருத்துவமனை

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது மேலூர், திருமங்கலம், அலங்காநல்லூர், முடுவார்பட்டி உள்ளிட்ட இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மேலூர் வட்டத்தில் சுற்றியுள்ள 100க்கணக்கான கிராம மக்கள் மேலூர் அரசு மருத்துவமனையைத்தான் முழுமையாக நம்பியுள்ளனர் . இங்கு காய்ச்சலுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ரத்தப் பரிசோதனையின் ரிப்போர்ட் இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாகப் புகார் எழுந்து வருகிறது . காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு லேப் டெஸ்ட் ரிசல்ட் அளிக்க தாமதமாவதால் நோயைக் குணப்படுத்த முடியாமல் தீவிரம் அடைந்துவருதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரித்தோம்.'' நாங்களே டெங்குக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று பயந்துகொண்டு ரத்தப் பரிசோதனை எடுக்கிறோம். ஆனால் இவர்கள் அதைக் கொடுப்பதற்குள் செத்துவிடுவோம் போல. அவ்வளவு அலட்சியம் கொண்டு தாமதப்படுத்துகின்றனர். லேப் டெஸ்ட் எடுக்க வரிசையில் நின்றே எங்களுக்கு மயக்கம் ஏற்படுகிறது. அதனால் சில நபர்கள் பரிசோதிக்காமலே திரும்பிச்செல்கின்றனர். லேப் டெஸ்ட் விரைவாக எடுத்து பரிசோதனை ரிசல்ட்டை வழங்கி சிகிச்சையளிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து  ரத்தப் பரிசோதனை செய்யும் நிலையத்தில் அதிகாரிகளிடம் விசாரித்தோம். ''நாங்கள் என்ன செய்வது சார், கூட்டம் அலைமோதுகிறது. விரைவாக லேப் டெஸ்ட் முடிக்க வேண்டும் என்றால் இயந்திரங்கள் அதிகமாக வேண்டும். மேலும் ஆட்களும் குறைந்த அளவில்தான் இந்த டிப்பாட்மென்டில் பணியாற்றுகிறோம். அதனால்தான் விரைவாக நிறைய நபர்களுக்கு ரிசல்ட் வழங்க முடிவதில்லை'' என்று தெரிவித்தனர் .

மேலூர் பகுதியில் குவாரிகள் காரணமா டெங்கு அதிகப்படியாகப் பரவியது என்று கடந்தாண்டு பள்ளி மாணவர்களின் கள ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. டெங்கு பாதிப்பில் மேலூர் பகுதியில் பலிகளும் அதிக அளவு உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற இயந்திர வசதிகள் குறைபாடு, பணி ஆட்கள் குறைபாடுகள் இருந்தால் டெங்கு பாதிப்பைத் தடுக்க முடியாது. எனவே அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!