கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு!

கச்சதீவில் தேசிய கொடி ஏற்ற கோரி மனு

நாட்டின் சுதந்திர தினத்தில் கச்சத்தீவில் இந்திய தேசியக்கொடி  ஏற்ற அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமாக இருந்து வந்த கச்சத்தீவு நாட்டின் சுதந்திரத்துக்கு பின் அரசு வசமானது. சமஸ்தானத்தின் வசம் இருந்தபோதும் அதன்பின் அரசின் பொறுப்புக்கு வந்தபோதும் அப்பகுதிக்குச் சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில்,1974-ம் ஆண்டு மத்திய அரசு கச்சத்தீவினை இலங்கைக்குக் கொடுத்துவிட்டது. இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அப்பகுதிக்கு சென்று ஓய்வு எடுக்கவும்,  மீன்பிடி வலைகளை உலர்த்தவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இலங்கை கடை பிடிப்பதில்லை. இதனால் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், மீனவர்களைப் படகுடன் சிறை பிடித்துச் செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் இலங்கையிடம் ஒப்படைத்த கச்சத்தீவினை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், மீனவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தீவில் இந்தியாவுக்கு உரிய பாரம்பர்ய உரிமையை நிலை நாட்டும் வகையில் வரும் சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியினை ஏற்ற அனுமதிக்கக் கோரியும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது போல் கச்சதீவிலும் இந்திய அரசு சார்பில் தேசியக் கொடி ஏற்றி விழா கொண்டாட வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சியினர் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயிலுக்குத் திருவிழா கொண்டாட செல்லும் மத உணர்வாளர்களுக்குச் செய்து தரும் ஏற்பாடுகளைப் போல் அங்கு கொடியேற்றச் செல்லும் தேசிய உணர்வாளர்களுக்கும் அத்தகைய ஏற்பாடுகளையும், வசதியையும் செய்து தருமாறு அந்த மனுவில் கோரியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!