கர்நாடகா பாணியில் கேரள சிறைத்துறை! - அடுத்த சர்ச்சையில் நடிகர் திலீப்

டிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனாலும், திலீப் தொடர்பான செய்திகளுக்குக் கேரளாவில் பஞ்சமில்லை. 'சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்' என திலீப் குறித்து திடீர் சர்ச்சை எழுந்துள்ளது. 

பிரபல மலையாள நடிகையைக் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், பல்சர் சுனில் உள்பட 7 பேரைக் கேரள போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது ஆலுவா சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் திலீப். அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் கேரள உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. நாளையுடன் தீலீப்பின் நீதிமன்ற காவலும் முடிவடைகிறது. இந்நிலையில், ஆலுவா ஜெயிலில் நடிகர் திலீப் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகத் தகவல் வெளியானது. திலீப்புக்கு தனி உணவு, தனி பாத்ரூம் உள்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது. இதையடுத்து, கேரள சிறைத்துறை ஏ.டி.ஜி.பி ஸ்ரீலேகா திடீர் ஆய்வு செய்துள்ளார். சிறையை முழுவதும் ஆய்வு செய்த அவர், திலீப்பை அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கும் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் தரையில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் பேட்டி அளித்தார். 

ஆனால், திலீப்புக்கு அருகில் தங்கியிருந்த சக கைதியான தனுக் என்பவர், சிறையில் திலீப் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகக் கூறி அதிர வைத்திருக்கிறார். கிரிமினல் வழக்கு தொடர்பாக, கடந்த வாரம்தான் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டார் தனுக். நேற்று ஜாமீனில் வெளியே வந்த தனுக், "நடிகர் திலீப் ஜெயிலில் சொகுசாகத்தான் வாழ்கிறார். பகல் முழுவதும் சிறை அதிகாரிகளின் அறையில் இருப்பார். கைதிகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு திலீப்புக்கு வழங்கப்படுவதில்லை. அதை அவர் சாப்பிடவும் மாட்டார். சிறை அதிகாரிகளுக்காக சமைக்கப்படும் உணவுதான் திலீப்புக்குக் கொடுக்கப்படுகிறது. அதையும் சிறை அதிகாரிகளின் அறையில் வைத்துதான் சாப்பிடுகிறார். அனைத்து கைதிகளும் குளித்துவிட்டுச் சென்ற பின், சிறை அதிகாரிகள் பயன்படுத்தும் பாத்ரூமில்தான் திலீப் குளிப்பார். இரவில் தூங்குவதற்கு மட்டும் செல்லுக்கு வருவார். அவருக்கு சிறையில் அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதை வெளியில் சொன்னால் சிறை அதிகாரிகள் தாக்குவார்கள் எனப் பயந்து யாரும் சொல்வதில்லை. நான் சொல்வது அனைத்தும் உண்மை. வேண்டும் என்றால் சிறையில் உள்ள கண்காணிப்புக் கேமராவைச் சோதித்துப் பாருங்கள்" என மீடியாக்கள் முன்னிலையில் சிறை நிலவரத்தை வெளிப்படுத்தினார். 

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி ஸ்ரீலேகாவின் பேட்டிக்கு மாறாக, சக கைதியே சிறைத்துறை மீது குற்றம் சுமத்தியிருப்பது கேரளாவில் விவாதப் பொருளாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!