வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (07/08/2017)

கடைசி தொடர்பு:17:56 (07/08/2017)

உற்சாகத்தில் பன்னீர்செல்வம்; கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி! - என்ன நடக்கிறது அ.தி.மு.க.வின் இரு அணிகளிலும்?!

ஓ,பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் அரங்கேறிய காட்சிகளால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ஏற்றதும் அனைவரும் அறிந்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்று, எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி. தினகரனுக்கும் மோதல் முற்றியிருப்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, உள்ளாட்சித் தேர்தலோ, சட்டசபைத் தேர்தலோ மக்களைச் சந்திக்கத் தயாராகி விட்டார் என்றே கூறலாம். ஓ.பன்னீர்செல்வம் செல்லும் இடங்களில் எல்லாம், பெருமளவுக்கு அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

தமிழக அரசை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமியும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா என்ற பெயரில் பல்வேறு இடங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

பல இடங்களில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது போன்று பூரணகும்ப மரியாதை, கோயில் அர்ச்சகர்கள் சந்திப்பு, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் என்று எடப்பாடிக்கு வரவேற்பு அளிக்கப்படுவதைப் பார்க்கும் போது, மக்கள் நமட்டுச் சிரிப்புடன் கமென்ட் அடித்து வருகிறார்கள். மேலும், திருமண நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் ஜெயலலிதா கூறுவதைப் போன்று, குட்டிக்கதையையும் கூறி, மக்களைக் கவர வேண்டும் என்று எடப்பாடி மேற்கொண்டு வரும் முயற்சி என்னவோ, அவருக்குப் பெயரை வாங்கிக்கொடுத்ததாகத் தெரியவில்லை.

"உயர, உயரப் பறந்தாலும் ஊர்க்குருவியால் பருந்தாக முடியாது. எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது. முதல்வர் எடப்பாடி ஏன் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்?" என்று அவரின் ஆதரவு நிர்வாகிகள் சிலரே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

"மேடைக்கு ராஜா போல் வேஷங்கள் போட்டாலும் ஏழைக்குப் பல்லாக்கு ஏறும் நாளேது?" என்று ஒரு திரைப்படப் பாடல் வரி இடம்பெறும். அதுபோன்று, வேறுவழியின்றி, சசிகலாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும், முதல்வர் பதவியேற்றவர் எடப்பாடி பழனிசாமி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒருவேளை நடந்து முடிந்து, தினகரன் வெற்றிபெற்றிருந்தால், எடப்பாடியின் முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்தைப் போன்று எப்பவோ பறிபோயிருக்கும்.

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்வோர் தவிர்த்து, ஏறக்குறைய 30 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சில அமைச்சர்கள் என சசிகலா குடும்ப விசுவாசிகளும் எடப்பாடி பழனிசாமியை வேறு வழியின்றி ஆதரித்து வருகிறார்கள். 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசு, உடனடியாக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்பட்சத்தில், முடிவு அநேகமாக எதிர்மறையாகவே இருக்கும் என்பது உறுதி. 

அமைச்சர்களாக இருப்போரும், எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களும், 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்' என்ற போக்கில்தான் தங்களின் அன்றாடப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

"எனக்குப் பின்னரும், இன்னும் நூறாண்டுகளானாலும், அ.தி.மு.க என்றும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடர்ந்து இருக்கும். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்" என்று சட்டசபையிலும், வெளியிலும் அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கர்ஜித்தார். 

எடப்பாடி பழனிசாமி"ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம்" என்று கூறிக் கொள்ளும் எடப்பாடியும், "ஆட்சியையும், கட்சியையும் சசிகலா குடும்பத்திடமிருந்து மீட்க வேண்டும்" என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் கூற்றை மறந்து தங்களின் சுயநலத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணராமல் இல்லை.

எனினும், அரசுப் பதவியில் இருக்கும் எடப்பாடிக்குக் கூடும் கூட்டத்தை விடவும், ஆட்சியில் இல்லாத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் இடங்களில் எல்லாம், அ.தி.மு.க-வினரிடையே ஓர் எழுச்சி இருப்பதை மறுத்து விடமுடியாது. ஆனால், ஓ.பி.எஸ். அந்தத் தொண்டர்களையெல்லாம் தக்கவைத்து, எதிர்காலத்தில் வாக்குகளாக மாற்றுவாரா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் எடப்பாடி அரசு, ஒருவேளை ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாலோ அல்லது மத்திய அரசு, தமிழக அரசை கலைத்தாலோ, தற்போது யார் யார் பக்கம் இருப்பவர்கள், எந்தப்பக்கம் அணி மாறுவார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"நித்திய கண்டம் பூரண ஆயுள்" என்ற பழமொழிக்கேற்ப, எடப்பாடி அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் அணிகள் இணைப்பு என்பது கானல்நீர் போன்றே கைகூடாமல் நீடித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஒருபுறமும், எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் நடத்தும் அரசியல் ஆர்பாட்டங்கள் மக்களைச் சலிப்படைய வைத்துள்ளன.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக வாக்குசதவிகிதத்தைப் பெற்ற கட்சி என்றும், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியிலிருந்த கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்த ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. என்ற இயக்கம், தற்போது சிதறுண்டு கிடக்கிறது. அந்தக் கட்சியை நம்பி வாக்களித்த தமிழக மக்களின் மனோநிலையும் வருந்தத்தக்கதாகவே நீடித்து வருகிறது. தமிழகத்தில் நீடிக்கும் பிரச்னைகளை முடிவுக்குக்கொண்டுவர விரைவில் நல்லதொரு நிலையான, நீடித்த, மத்திய அரசுக்கு அடிபணியாத ஆட்சி மலர வேண்டும் என்பதே நமது விருப்பம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்