மீன்பிடி உரிமை கோரி மன்னார் வளைகுடா தீவுகளில் 'குடியேறும் போராட்டம்'!

பாரம்பரிய மீன்பிடி உரிமை கோரி மன்னார்வளைகுடா தீவுகளில் 'குடியேறும் போராட்டம்' நடத்தப் போவதாக தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் தொடங்கி வாலிநோக்கம், முந்தல் வரையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிரமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் மீன்பிடித் தொழில் மன்னார் வளைகுடா கடல் பகுதியைச் சார்ந்தே உள்ளது. கடல் வளத்திற்கோ மீன் வளத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இயந்திரங்கள் ஏதுமின்றி கூண்டு வைத்தும், வலி வலைகள் மூலமும் மீனவர்கள் இங்கு மீன் பிடித்து வருகின்றனர். இது தவிர இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள் கடலில் இறங்கி பாசி சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

மீன்பிடி உரிமை கோரி மன்னார்வளைகுடா தீவில் குடியேறும் போராட்டம்

இந்நிலையில் மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொள்ளாமல், கடல் வளப் பாதுகாப்பு என்ற பெயரில் இப்பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களின் விளைவாக மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்கவும் பாசி சேகரிக்கவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனிடையே சமீப காலமாக வனத்துறையினர் இத்தகைய மீனவர்களைத் தீவுப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது எனத் தடுத்து வருவதுடன், மீனவர்கள் மீது வழக்குத் தொடுப்பது, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மன்னார் வளைகுடா கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வரும் 25-ம் தேதி அன்று மன்னார் வளைகுடா தீவுகளில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகி கருணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!