'எங்களுக்காகப் போராட வேண்டாம்!'- இரோம் ஷர்மிளாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆதிவாசி மக்கள்..!

கொடைக்கானலில் இருக்கும் இரோம் ஷர்மிளா, 'இங்கிருக்கும் ஆதிவாசி மக்களுக்காகப் போராடுவேன்' என்று அறிவித்திருந்தார். இதற்கு, ஆதிவாசி மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Irom Sharmila

கொடைக்கானலில் தங்கியுள்ள இரோம் ஷர்மிளா தனது காதலர் தேஸ்மந்த் கொட்டிகோவை திருமணம் செய்துக்கொள்வதற்காக, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி விண்ணப்பம் அளித்திருந்தார். இதையடுத்து இவரது திருமணத்திற்கு பல திசைகளில் இருந்தும் எதிப்புகள் வந்துகொண்டே உள்ளன. 'கொடைக்கானல் வாழ் ஆதிவாசிகளுக்காகப் போராடுவேன்' என இவர் தெரிவித்த கருத்துதான் எதிர்ப்புகளுக்கான காரணமாக இருக்கிறது. கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகர் மகேந்திரன், இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார், உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஏற்கெனவே இரோம் ஷர்மிளா திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பாரதி அண்ணா நகர், பாலமலை, சாம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகளும்  பொதுமக்களும் கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவகத்தில் இன்று ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில், 'கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து மாவோயிஸ்ட் நடமாட்டத்தினால் ஆதிவாசிகளாகிய நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம். தற்போது இரோம் சர்மிளா எங்களுக்காகப் போராடுவேன் என்று கூறி கொடைக்கானலில் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். இவர் போராடுவதற்கு ஆதிவாசிகளைப் பயன்படுத்த வேண்டாம். இவர் போராட வேண்டும் என்று விரும்பினால் அவரது மாநிலமான மணிப்பூருக்குச் சென்று போராடட்டும். இவரது திருமணம் இங்கே நடைபெற்றால் கொடைக்கானல் கலவர பூமியாகும். ஆகவே இவர்களுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி, கொடைக்கானலை விட்டு வெளியேற்ற வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆதிவாசிகளுக்குப் போராடுவேன் என்று சொன்ன இரோம் ஷர்மிளாவை எதிர்த்து ஆதிவாசிகளே மனு கொடுத்திருப்பதால் கொடைக்கானலில் பரபரப்பு நிலவி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!