''ஜிஎஸ்டி வரி தூய்மை இந்தியா திட்டத்துக்கு எதிரானது!'' - தா.பாண்டியன்

ஜி.எஸ்.டி குறித்து தா.பாண்டியன்

நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எதிராக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று திருப்பூர் வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், "நாடு முழுவதும் ஒரே வரி" என்ற கொள்கை சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தியது ராஜாகோபாலச்சாரியார் தான். மதுவிலக்கை அவர் அமல்படுத்தியதால், அதன் இழப்பை ஈடுகட்டவே அவர் விற்பனை வரியை கொண்டுவந்தார். இதனால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது மாநில அரசுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தந்தது. பின்னர் 2011-ம் ஆண்டு கால கட்டங்களில் காங்கிரஸ் அரசின் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இந்தியா முழுவதும் ஒரே வரியைக் கொண்டுவர வேண்டும் என்ற மசோதாவை தயாரித்தபோது அதை முழு மூச்சாக எதிர்த்தார்கள் அன்றைய குஜராத் முதல்வர் மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும். ஆனால், இன்றைக்கு அதே வரி கொள்கையை மோடியே புதிதாக கண்டுபிடித்ததைப்போல் இப்போது ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கிறது

உணவுப்பொருள்கள் மீதும், சிறு குறு தொழில்களின் மீதும் அதிகப்படியான வரியை சுமத்தியிருக்கிறார்கள். முதலில் இந்த ஜிஎஸ்டி வரியின் மூலம் பொருள்களின் விலை அனைத்தும் குறையும் என்றார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உயர்தர தனியார் முதலாளிகளுக்கும் ஆதரவாக இருக்கும் இந்த வரிக்கொள்கை, உயர் வர்க்க மக்கள் பயன்படுத்தும் பென்ஸ் கார் போன்றவற்றின் விலையைத்தான் குறைந்திருக்கிறதே தவிர,  சாதாரண மனிதன் உண்ணும் சப்பாத்திக்கும், கடலை மிட்டாய்க்குமான விலையை முற்றிலுமாக உயர்த்தியிருக்கிறது.

தா பாண்டியன்

நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அவற்றை சாலைகள் அமைப்பதற்கு பயன்படும் வகையில் குண்டுமணிகளைப் போல அரைத்து தரும் தொழிற்சாலைகளுக்கு 15% ஜிஎஸ்டி வரியை சுமத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அப்பணியை செய்யக்கூடிய 6 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தெருவில் கிடக்கும் குப்பைகளை எடுப்பதன் மூலம் நாட்டுக்கு ஒருவகையில் நற்பணியை செய்துவந்த அந்த தொழிற்சாலைகள், தற்போதைய ஜிஎஸ்டி வரியால் முற்றிலுமாக முடங்கியிருப்பதோடு, அத்தொழில் சார்ந்து இயங்கக்கூடிய 3 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தூய்மை இந்தியா திட்டம் என்று கூறி, நாட்டையே தூய்மைப் படுத்துவோம் என முழங்கி வரும் பா.ஜ.க அரசு, அந்தக் கொள்கைக்கு எதிராகவே ஜிஎஸ்டி. வரி கொள்கையைக்கொண்டு வந்திருப்பதுதான் இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது மிகவும் அசிங்கமான முடிவாகவும் இருக்கிறது. உயர் வர்க்க மக்கள் தான் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சிறு உணவகங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். ஒரு சாதாரண உணவகத்தில்கூட 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் 146 ரூபாயை பில்தொகையாக கட்டவேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இப்படியே சென்றால், வெளிமாநிலங்களுக்கு போய் வேலைபார்க்கும் முறையே சிதைந்துப்போய்விடும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!