வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (08/08/2017)

கடைசி தொடர்பு:16:11 (08/08/2017)

தமிழகத்தை முந்துமா கேரளா..?! மோடியின் மேஜையில் இருக்கிறது பட்டியல்!

பினரயி விஜயன்

மிழகத்தின் அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு அதன் வாழ்நாள்களைக் கணித்துக்கொண்டு வருகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆனால் தமிழகத்தை முந்தும் விதமாக கேரளாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என அச்சத்தில் கிடக்கிறார்கள் கேரள கம்யூனிஸ்ட்டுகள். கேரளாவில் சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என ஆதாரம் காட்டி கேரள அரசைக் கலைக்கும் முயற்சிகளில் பாஜக தீவிரமாகக் காரியங்களை முன்னெடுத்துவருகிறது என்பதுதான் அவர்களின் அச்சத்திற்கு காரணம். 

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார். பாஜக புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் பாஜக வலுவாக காலூன்றுவதற்கான செயல்திட்டங்களை அங்கு செய்துவருகிறது. மாநிலத்தில் இளைஞர்களை குறிவைத்து தங்கள் கொள்கை விளக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தி ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளை உருவாக்கும் பணிகளை சிரத்தையாக தற்போது செய்துவருகிறது. இதனால் அங்கு கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் ஆர்.எஸ். எஸ் தொண்டர்களுக்கும் ஏழாம்பொருத்தமாகவே உள்ளது. அவ்வப்போது பல இடங்களில் இரு தரப்புக்கும் கடும் மோதல் நிகழ்கிறது. இந்த மோதல் சமயங்களில் கொலையில் முடிகிறது. இருதரப்பிலும் பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துவருகிறது. 

ராஜேஷ்இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ராஜேஷ் என்பவர் கடந்த வாரம் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவர் கேரளாவில் படுகொலையான சிபிஎம் பிரமுகர் தன்ராஜ் என்பவரின் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. இது கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு எதிரான இந்த வன்முறை, பாஜக மேலிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து கேரள அரசின் மீது பெரும் எரிச்சலும் அதிருப்தியும் மத்திய அரசு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கேரள அரசை பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து தங்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எரிச்சலாகி உள்ளது மத்திய அரசு. கேரள அரசின் செயல்களை இனியும் பொறுத்துக்கொள்ளமுடியாதென இப்போது ஒரு முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அது சட்டப்படியான நடவடிக்கையாக இருக்கும் என்கிறார்கள். அதாவது கேரளாவில் இப்படியான படுகொலைகளால் அங்கு சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசைக்கலைப்பதே மத்திய அரசின் திட்டம் என்கிறார்கள். 

இதற்கு முன்பே பல சம்பவங்களில் இந்தக் குற்றச்சாட்டை பாஜக கேரள அரசின் மீது முன்வைத்தது என்றாலும் இந்த முறை அதை ஒரு திட்டத்துடன் தீவிரமாக்கியுள்ளது என்கிறார்கள். ராஜேஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல நேற்று கேரளா வந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “கேரள மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லை' என்று குறைகூறிச் சென்றுள்ளார். கேரளாவில் நடந்த முந்தைய சம்பவங்களையும் பட்டியலிட்ட அவர், அரசுக்குத் தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது “கேரளாவில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், கேரளாவில் இடதுசாரி முன்னணி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிடுவதாகவும் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியையும் அரசையும் தாக்கிப்பேசினார்.

இது ஒருபுறமிருக்க, ராஜேஷின் மரணம் நிகழ்ந்த அன்றே டெல்லியில் பாஜக மேலிடப்பிரதிநிதிகள் மத்தியில் நிகழ்ந்த ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் கேரளாவுக்குப் பாடம் புகட்டியே தீரவேண்டும் என முக்கிய நிர்வாகிகள் சிலர் பேசியுள்ளனர். அதன் அடிப்படையில் கேரளா அரசுக்கு எதிராக இந்த முறை அமித்ஷாவும் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு எதிராக இதுவரை நடந்த கொலைச்சம்பவங்களின் பட்டியலை தயாரித்துத்தரச்சொல்லியுள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா. இதற்கு டெல்லி தலைமையிலிருந்தும் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளது பாஜக மேலிடம்.

இதன்படி கடந்த ஒரு வாரத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலை அமித்ஷாவசம் ஒப்படைத்திருக்கிறது இந்தக்குழு. பட்டியலைப்பார்த்த அமித்ஷா அதிர்ந்துபோனார் என்கிறார்கள். இப்போது அதிர்ச்சிகரமான அந்தப் பட்டியல் பிரதமர் மோடியின் மேஜையில் உள்ளதாக சொல்கிறார்கள். இதனால் கேரள அரசுக்கு சட்டச் சிக்கல் எழலாம் என்கிறார்கள் பாஜகவுக்கு நெருக்கமான சிலர்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரயில் பாதுகாப்பு வசதிகள் குழு உறுப்பினரும் அமித்ஷாவின் நெருக்கமான வட்டத்தில் உள்ளவருமான ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் பேசினோம். கேரள அரசின் வாழ்நாள்கள் எண்ணப்படுகிறதா என்று கேட்டோம். 

ஆசிர்வாதம் ஆச்சாரி“வாழ்நாள் எண்ணப்படுகிறதா என்பது தெரியாது. ஆனால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது வெளிப்படையாகத் தெரிவதால் அந்த ஆட்சி தன் ஆளும்தகுதியை இழந்துவிட்டது. கேரளாவில் 1969 ல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் வடிகால் ராமகிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம்தான் கேரளாவின் முதல் அரசியல் கொலை. அந்த வழக்கின் முதற்குற்றவாளி வேறு யாருமல்ல; இன்றைய முதல்வர் பினராயி விஜயன். சந்தேகத்தின் பலனாக அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் பினராயி விஜயன். அதன்பின்னர்தான் அவர் கட்சியில் கிடுகிடுவென வளர ஆரம்பித்தார். இப்படி ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர் ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்தக் கதியில் இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்.

பினராயி விஜயனின் ஆதரவில் சமீப காலங்களாக அங்கு கம்யூனிஸ்ட்டுகளின் அதிகார அட்டூழியங்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. அவர்களது நோக்கம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அங்கு தலையெடுத்துவிடக்கூடாது என்பதுதான். 1969அன்று முதல் இன்று வரை அங்கு கம்யூனிஸ்ட்டுகளால் 304 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2016 -17 ல் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியினரின் உயிருக்கு அங்கு பாதுகாப்பில்லை. ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் இளைஞர்களின் பெற்றோர்களுக்கு, 'உன் மகனை உயிரோடு கொளுத்திவிடுவோம்' என கம்யூனிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதற்கு ஆளும் அரசு உடந்தை.

 

 கேரளாவில் ஒன்று காங்கிரஸ் ஆள வேண்டும், அல்லது கம்யூனிஸ்ட் ஆளவேண்டும் என அந்த 2 கட்சிகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதனால் கவனமாக பாஜகவின் வளர்ச்சியைத் தங்கள் அதிகாரத்தைப்பயன்படுத்தி ஒடுக்க நினைக்கிறார்கள். அதன் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். சமீபகாலமாக இது எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறை இந்த அக்கிரமங்களுக்குத் துணைபோவது நடக்கிறது. கடந்த மாதம் 27ந்தேதி அங்குள்ள எங்கள் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியபோது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் ஓடிவிட்டனர். அடுத்த 2 தினங்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொல்லப்படுகிறார். இப்படித்தான் சட்டம் ஒழுங்கு அங்கு உள்ளது. அதன் உச்சகட்டம்தான் ராஜேஷ் படுகொலை. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மீது புகார் கொடுத்தால் காவல்துறை அதன்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த அரசுக்கு இல்லை. இப்படிச் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மாநிலத்தை மத்திய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவா முடியும்?... அரசியலமைப்புச் சட்டப்படி அதன் கடமையைத்தான் செய்யும்!

மோடி

இதுமட்டுமின்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுக்களுடன் இந்தியாவில் இருந்து தொடர்பு கொண்டவர்களில் அதிகமானோர் கேரளாவில் இருந்து செல்கிறார்கள். குறிப்பாக மலப்புரம். இப்படித் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வேலைகளையும் சத்தமின்றி பினராயி விஜயன் அரசு செய்துவருகிறது. இதுபற்றிய விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்படி எல்லா விஷயங்களிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடக்கும் பினராயி விஜயன் ஆட்சி தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்துவிட்டது. கேரளாவில் சட்ட ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவர அங்கு கவர்னர் ஆட்சி கொண்டுவருவதே இப்போதைக்கு சிறந்தது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. கேரள அரசு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தத்தவறியதற்கான அனைத்து ஆதாரங்களையும் பாஜக மேலிடம் திரட்டிவைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கண்டித்து 9ந்தேதி டெல்லியில் பெரிய பேரணி நடத்த உள்ளோம். அதன்பிறகு கேரளாவில் அரசியல் சூழல் மாறலாம்” எனச் சொல்லி முடித்தார் ஆசிர்வாதம் ஆச்சாரி.

அரசியல் படுகொலைகளின் எதிரொலியாக பாஜகவின் கவனம் இப்போது முழுக்க முழுக்க கேரள அரசின் மீதே உள்ளது என்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்