அடுத்த வார தொடர் விடுமுறையைக் குழந்தைகளுடன் எப்படி கொண்டாடலாம்? | Tips to plan your holidays to enjoy with kids at the fullest!

வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (08/08/2017)

கடைசி தொடர்பு:09:26 (08/08/2017)

அடுத்த வார தொடர் விடுமுறையைக் குழந்தைகளுடன் எப்படி கொண்டாடலாம்?

விடுமுறை

விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு மட்டுமா குஷி? ஓடி ஓடி உழைக்கும் பெரியவர்களும் குதூகலமா குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மதியம் வரை தூக்கம், மாலையில் ரவுண்ட்ஸ், சினிமா, கடற்கரை, மால், வெளியூர்ப் பயணம் எனப் பல பல திட்டங்களுக்கு விடுமுறையில் ஸ்கெட்ச் போடுவோம். மனதுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் மகிழ்ச்சியே. ஆனாலும், மகிழ்ச்சியுடன் மனநிறைவையும், ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலுக்கோ, சுற்றி இருக்கும் மனிதர்களுக்கோ நன்மை செய்தால், அந்த விடுமுறை இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா? 

ஜூன் மாதம் பள்ளி தொடங்கியதிலிருந்து தொடர்ந்து விடுமுறை தினம் எப்போது வரும்! பாடப் புத்தகங்களுக்கு எப்போது விடுமுறை அளிக்கலாம் என ஆவலாக இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த ஆகஸ்ட்டில் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. 12,13,14,15 எனத் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறை உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுடன் கொண்டாட ஒரு திட்டம் போடலாமே...

எங்கே போடறது? விடுமுறை தினம் வரும் முன்னே, அதுக்கெல்லாம் சேர்த்து வீட்டுப் பாடம் கொடுத்துடுறாங்களே. பசங்களோடு சேர்ந்து நாங்களும் மாங்கு மாங்கு என எழுதிக்கொடுக்க வேண்டியதா இருக்கே என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த உலகத்தின் வேறு விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். 

வண்ணத்துப்பூச்சி

போட்டிகள் நிறைந்த உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம் குழந்தைகள், பல உறவு முறைகளையே மறந்துவிட்டனர். இயற்கையை மீட்டெடுக்கவும், உறவுகளை மீட்டெடுக்கவும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவோம். எந்திர உலகத்தில் வாழும் நம் குழந்தைகளுக்கு, நெல் செடியில் விளைகிறதா மரத்தில் விளைகிறதா என்றுகூடத் தெரிவதில்லை. இந்த நான்கு நாள் விடுமுறையில் அதற்கு ஒரு திட்டம் போடுவோம். சினிமா, தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு, ஐபேடு என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, உங்களின் சொந்தக் கிராமங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். விட்டுப்போன உறவுகளின், நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடனும் அவர்களின் குழந்தைகளுடன் உறவாட உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பை அளியுங்கள். 
குழந்தைகளை வயல்வெளிகளுக்கு அழைத்துசென்று உழவின் கதையையும் உழவனின் உழைப்பையும் எடுத்துச் சொல்லுங்கள். செடிகளையும் கதிர்களையும் தடவி உணரச் சொல்லுங்கள். மண்ணில் ஓட விடுங்கள்; புரள விடுங்கள். உங்கள் நினைவில் இருக்கும் ஆலமர கதைகளையும், ஆற்றோர விளையாட்டுகளையும் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் நிச்சயம் அதை ரசிப்பார்கள். 

நான் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவனாயிற்றே என்கிறீர்களா? பரவாயில்லை. இப்போது பல்வேறு தன்னார்வ அமைப்புகள், நமது மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காகப் பல விஷயங்களை முன்னெடுக்கின்றன. விதை சேகரிப்பு, வயல் வேலை, கிராமியக் கலை எனப் பலவற்றை கற்றுக்கொடுக்கின்றன. அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் பற்றி விசாரித்து அங்கே அழைத்துச் செல்லுங்கள். 

கிராம வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைக் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். இயற்கை முறையைக் கற்று வீடு திரும்பும்போது, பூச்செடிகளையும் காய்கறி செடிகளையும் வாங்கி வாருங்கள். மாடித் தோட்டம் அமைத்து, அதைப் பராமரிக்கும் பொறுப்பைக் குழந்தைகளிடம் ஒப்படையுங்கள். உற்சாகமாகச் செய்வார்கள். உழவின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். உறவுகளின் அவசியத்தையும் தெரிந்துகொள்வார்கள். 

விடுமுறை முடிந்து பள்ளி சென்றதும், ஆரோக்கியமான விடுமுறை தின அனுபவங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அது மேலும் மேலும் பரவும். செய்யலாமா நண்பர்களே! 


டிரெண்டிங் @ விகடன்