குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் களேபரம்!?

கடந்த சட்டமன்ற தேர்தலில் குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க.தோல்வியடைந்தது. அதன் எதிரொலியாகக் கடந்தாண்டு ஜூன் 8-ம் தேதி தளவாய்சுந்தரத்தை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. ராஜ்யசபா எம்.பி-யாக அறிவிக்கப்பட்ட விஜயகுமாரை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா அறிவித்தார். தளவாய் சுந்தரம், பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எனக் குமரி அ.தி.மு.க-வில் கோலோச்சியவர்கள் அப்போதே ஒதுங்கிவிட்டனர். விஜயகுமாரைச் சுற்றி, அவரது உறவினர்கள் , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரோடு புது அணி உருவானது. சில வாரங்களில் ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தமாக கிளை முதல் மாவட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். குமரி மாவட்டத்தில் துடிப்பாக இருந்த பல அ.தி.மு.க-வினருக்குப் பதவி பறிக்கப்பட்டது.

தொடக்கத்தில் விஜயகுமாரின் ஆதரவாக இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தவர்களும் படிப்படியாக விலகத் தொடங்கினர். இதனால், அ.தி.மு.க-வின் மாவட்டத் தலைமை அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில், 'மாவட்டச் செயலாளர் விஜயகுமார் கட்சிக்காரர்களை மதிப்பது இல்லை, விஜயகுமார் வந்தபின் கட்சி அழியத் தொடங்கிவிட்டது' என்று அ.தி.மு.க-வினர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் ஓ.பி.எஸ்-ஸின் பிரிவுக்குப் பின்னரும் குமரி அ.தி.மு.க பல பிரிவுகளாகச் சிதறிப் போனது. முன்னாள் அமைச்சர்கள், பச்சைமாலும் தளவாய் சுந்தரமும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த குமரி மாவட்ட அ.தி.மு.க இப்போது சோர்வடைந்து விட்டது. கழக அமைப்புச் செயலாளராகவும் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் இருக்கும் தளவாய் சுந்தரம் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது முன்னாள் அமைச்சரான பச்சைமாலுக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. குமரியின் நீண்டகால அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த பச்சைமால் இப்போது அடுத்த இன்னிங்ஸை ஆடத் தயாராக்கிவிட்டார். பெரும்பாலான அ.தி.மு.க-வினர் பச்சைமாலின் பக்கம் இருப்பதால் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி., அணி கலக்கத்தில் உள்ளது. இப்போது மாவட்டச் செயலாளரிடம் 2 அணி செயலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். விரைவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு வரவிருக்கிறார். பச்சைமால் மாவட்டச் செயலாளர் ஆகும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்கு முன் குமரி மாவட்ட அ.தி.மு.க-வில் களேபரம் நடக்கும் என அ.தி.மு.க விசுவாசிகள் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!