சொந்த நிதியில் கால்வாய்களைத் தூர்வாரும் வசந்தகுமார் எம்.எல்.ஏ!

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ-வான வசந்தகுமார், தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி குளங்களைத் தூர்வாரி வருகிறார். தற்போது களக்காடு அருகே உள்ள நெட்டேரியன், கோர ஓடை கால்வாய்களைத் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொகுதி வளர்ச்சிப் பணி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஹெச்.வசந்தகுமார், தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்காக இலவச டியூசன், கல்வி உதவித் தொகை போன்ற உதவிகளை வழங்கி வரும் அவர், தனது தொகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தமாக ஜே.சி.பி எந்திரம் வாங்கியிருக்கிறார்

தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக இந்த எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், குளம், கால்வாய்களில் உள்ள செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட செங்களா குளம், சிங்கிகுளம், கழுவூர் குளங்கள், படலியார் குளம், இடையன்குளம், பச்சைக்குளம் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் தூர்வாரி முடிக்கப்பட்டன. 

அத்துடன், தருவை பாளையங்கால்வாய், களக்காடு நாகன்குளம் பிரிவிலிருந்து படலையார்குளம் கால்வாய்கள் உள்ளிட்டவையும் தூர் வாரி முடிக்கப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து களக்காடு அருகிலுள்ள நெட்டேரியன் நீர்வரத்து மற்றும் கோர ஓடைக் கால்வாயைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தூர்வாரினால், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெறும் என்பதால் இந்தப் பணிகள் நடக்கின்றன.  இதுகுறித்து வசந்தகுமார் எம்.எல்.ஏ கூறுகையில், ‘’எனது தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காகவே ஜே.சி.பி எந்திரம் வாங்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், தூர்வாரப்பட வேண்டிய குளங்கள், கால்வாய்கள் குறித்த பட்டியலை எனது தொகுதி அலுவலகத்தில் கொடுக்கிறார்கள். அதில் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். நாங்குநேரி தொகுதியை முன்னுதாரம் மிக்க தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம். அதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!