மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அமித் ஷா!

 

அமித் ஷா

பா.ஜ.க-வின் தேசியத் தலைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா, இன்று நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று பேரும், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து ஆறு பேரும், நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், குஜராத் மாநிலத்திலிருந்து அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்கள் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் தேர்தலில் போட்டியிடுகிறார். குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்க, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஆடம்பர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமித் ஷாவைப் பொறுத்தவரை, குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் தேர்வுசெய்யப்படுவதன்மூலம் ஆளும் கட்சியின் பலம் நாடாளுமன்றத்தில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 

2014-ம் ஆண்டு மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தனது வெற்றிக்கு அமித் ஷாவே பெரிதும் காரணம் என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!