தமிழக மீனவர்கள் 44 பேர் சிறைபிடிப்பு..! இலங்கைக் கடற்படை வீரர் கடத்தல்?

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்  40-க்கும் மேற்பட்டவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளதால், மீனவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.  இதனிடையே, இலங்கைக் கடற்படை வீரர் ஒருவரை தமிழக மீனவர்கள் கடத்தி வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.  இந்த தகவல் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

மீனவர்கள் படகுகள்


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், 2 படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்துச்சென்றனர். அதன் பின்னரும் திருப்தி அடையாத இலங்கைக் கடற்படையினர்,  மற்ற பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது, ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகு சேதம் அடைந்து, அதிலிருந்த மீனவர்கள் கணேஷ், பாலமுருகன் இருவரும் கடலில் விழுந்தனர். பின்னர் இவர்கள் மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மேலும் 9 படகுகளையும் அதிலிருந்த 36 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரிடமிருந்து தப்பிவந்த ஜெகதாபட்டினம் மீனவர்கள், இலங்கைக் கடற்படை வீரர் ஒருவரை கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என இலங்கைக் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தகவல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் இலங்கைக் கடற்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக சிறைபிடிக்கப்பட்டிருப்பதால், தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!