'போராட்ட வடிவம் சரியில்லை'- அய்யாக்கண்ணுக்கு நல்லசாமி அறிவுரை

 

"தமிழக விவசாயப் பிரச்னைகளுக்காக இரண்டாவது பயணமாகப் போய், டெல்லியில் போராடிவரும் திருச்சி அய்யாக்கண்ணுவின் நோக்கம் நல்ல விசயம்தான். ஆனால், அவரின் போராட்ட வடிவம் சரியில்லை. இதனால், அந்தப் போராட்டம் வெற்றி தராது" என்று அதிரடியாகப் பேசுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி,  "டெல்லிக்கு இரண்டாவது பயணமாகப் போய், தமிழக விவசாயப் பிரச்னைகளுக்காகப் போராடிவரும் அய்யாக்கண்ணுவின் நோக்கம் நல்ல விசயம்தான். ஆனால், அவருடைய போராட்ட வடிவம் ஏற்புடையதாக இல்லை. தமிழனின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் சிதைப்பதோடு, அவரின் போராட்டக் காட்சிகள் நமக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதனால், அவரின் போராட்டம் நமக்கு தலைகுனிவை மட்டும் ஏற்படுத்துமே தவிர, வெற்றியைத் தராது. பொது விநியோக முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 'தமிழக அளவில் தென்னை மரங்களில் நீரா பானம் இறக்கி விற்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்ததோடு, தங்களின் சாதனைப் பட்டியலில் முதலாவதாகவும் இதைக் குறிப்பிட்டு, தம்பட்டம் அடித்தது. ஆனால், இன்னமும் நடைமுறைபடுத்த முன்வரவில்லை.

அதேபோல, 'கள்' ஒரு தடைசெய்யப்பட்ட பொருள் அல்ல. உணவின் ஒரு பகுதியே. மேலும், கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை. ஆனால் தமிழக அரசுகள், 30 ஆண்டுகளாக அந்த உரிமையைப் பறித்திருக்கின்றன. 'கள்'ளை  யாராவது போதைப்பொருள் என்று நிரூபித்தால், கள் இயக்கம் கலைக்கப்படும். அரசும் அரசியல் கட்சிகளும் 'கள்' பற்றி எங்களோடு விவாதிக்கத் தயாரா?.

தமிழகத்தில் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எளிதில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆகவே, தினசரி நீர் பங்கீடு என்ற தீர்ப்பை மாற்றினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். ஆகவே, தமிழக அரசு காவிரி பிரச்னைக்காக உடனே ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல்செய்வதோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். இதுவே, எங்கள் அமைப்பின் கோரிக்கை" என்று கூறினார்.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!