வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (08/08/2017)

கடைசி தொடர்பு:15:35 (09/07/2018)

'தினமும் வீணாகும் 800 லிட்டர் குடிநீர்!' அலட்சியத்தால் கொந்தளிக்கும் மக்கள்

மற்ற மாவட்டத்தைவிட கரூரில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டமே சுண்ணாம்பு மண் அதிகம் நிறைந்த மண் தன்மை கொண்ட மாவட்டம் என்பதாலும், ஏற்கெனவே வரலாறு காணாத வறட்சி நிலவுவதாலும், 'எங்கே தேடுவேன். குடிநீரை எங்கே தேடுவேன்' என்று மாவட்ட மக்கள் காலிக் குடங்களோடு சோக கானம் பாடியபடி குடிநீர் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

தினமும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், 'வேண்டும் வேண்டும் குடிநீர் வேண்டும்' என்ற கோஷத்தோடு, சாலை மறியல், பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கிவிடுகிறார்கள். குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூரை எட்டும் முன்னே, கதவடைத்துவிட்டார்கள். இப்படி மாவட்டமே தாகத்தோடு அலைய, இதே மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் தினமும் 800 லிட்டர் குடிநீரை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புகார் எழுந்திருக்கிறது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் உள்ள லட்சுமணப்பட்டி செல்லும் வழியில்தான் தண்ணீர் விரயம் நடப்பதாக பகுதி மக்கள் புலம்புகிறார்கள்.  'என்ன, ஏது' என்று கேட்டு, மக்களின் புலம்பலுக்கு காது கொடுத்தோம். "மாவட்டம் முழுவதும் பல ஊர்களில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலைமை. ஆனால், ஏதோ நல்ல நேரம் எங்க பேரூராட்சியில இன்னும் குடிநீர் பஞ்சம் வரலை. ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் குடிநீர் பஞ்சம் சீக்கிரம் வந்துடும் போல. எங்க ஊராட்சியில லட்சுமணப்பட்டி போற வழியில இரண்டு பொது பைப்புகள்ல திருகி அடைக்கும் அடைப்பான் பழுதாயிட்டு. இதனால், தண்ணீர் நிக்காம கீழே வேஸ்ட்டா போகுது. நாங்களும் குச்சி, துணிகள் எல்லாம் வச்சு அடைச்சு பார்த்தோம். அப்படியும் நிக்கலை. இருபது தடவைக்கு மேல போய் நகராட்சி நிர்வாகத்துக்கிட்ட, 'இந்த பைப்புகள சரி பண்ணுங்க'ன்னு புகார் சொல்லிட்டோம். 'இந்த வர்றோம், அந்தா வர்றோம்'ன்னு பந்தா காட்டுறாங்களே தவிர, இன்னமும் வரலை. இதனால், தினமும் 800 லிட்டர் தண்ணீர் வேஸ்ட்டா பூமிக்குள்ள போகுது. இந்த நிலைமை தொடர்ந்துச்சுன்னா, மாவட்டத்தின் மற்ற பகுதிகள் போல் எங்க ஊர்லயும் தண்ணீர் பஞ்சம் வந்துடும். உடனே இதை சரி பண்ணலன்னா, போராட்டம்தான்" என்றார்கள்.