சவால்விட்ட செங்கோட்டையனுக்கு தேதி, நாள், நேரத்தை அறிவித்தார் அன்புமணி!

அன்புமணி- செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா என்று சவால்விட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு நாள், தேதி, நேரத்தை அறிவித்துள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்துக்கான நாளையும் இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து, விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.   

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா எனச் சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன்தான். அவரது சவாலை நான் ஏற்றுக்கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும் தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர்தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா என்று தெரியவில்லை. ஆனாலும், அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்துக்கான ஏற்பாடுகளை பா.ம.க மேற்கொள்ளும். பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும் சவால்களை எதிர்கொள்வதும் பா.ம.க-வுக்கு புதிதல்ல. 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பா.ம.க, அதில்  24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது. அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.

ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியைக் கடைச்சரக்காகவும் தரமற்றதாகவும் மாற்றியது அ.தி.மு.க-தான். இப்போதும்கூட பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாகக் கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனினும், செங்கோட்டையனும் அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ.5 லட்சத்தை அளவீடாகக் கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60 % காலியாக உள்ளன. அதேநேரத்தில்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்
90 %-க்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கபூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு வரும் 12.8.2017 மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாகத் தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!