வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (08/08/2017)

கடைசி தொடர்பு:16:10 (08/08/2017)

”முறைகேடுகளை வெளியிடுவேன்!” மிரட்டிய கிரண்பேடி; கொந்தளித்த நாராயணசாமி!

”என் மீது தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், முறைகேடுகளை வெளியிட நேரிடும்” என்று ஆளுநர் கிரண்பேடியும், “புதுச்சேரி மாநிலத்தைப் பின்னே தள்ளுவதற்காக கிரண் பேடி செயல்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று முதல்வர் நாராயணசாமியும் பேசியிருப்பது, புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

குஜராத் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திமீது கல்வீசித் தாக்குதல் நடந்தது. அந்தச் சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நடத்திய கண்டனப் போராட்டத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரி ஆளுநர் பா.ஜ.க-வின் நிர்வாகி போலவும் ஆளுநர் மாளிகையை பா.ஜ.க-வின் தலைமை அலுவலகம் போலவும் செயல்படுத்திவருகிறார். துறைமுகத்தைத் தூர்வாரும் பணியில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறுகிறார். ஆனால், இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தவரே அவர்தான். விமானப் போக்குவரத்து வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தற்போது அதை ஆய்வுசெய்கிறார். அந்தத் திட்டத்தையும் நிறுத்துவதாகத்தான் அவரது ஆய்வு இருக்கும். ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாட்டால் புதுச்சேரி அரசு முடங்கிப் போய் உள்ளது. காவல்துறை எஸ்.பி போலவே செயல்பட்டுவரும் அவர், புதுச்சேரியை காவல் நிலையமாகத்தான் நினைக்கிறார்” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ”அமைச்சர் தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், உதான் விமானத் திட்டம் தொடர்பான கோப்பில் ஆளுநர் மாளிகை தலையிடாமல் இருந்திருந்தால், அதில் என்னென்ன நிதி முறைகேடுகள் செய்திருப்பார்கள் என்பதை எனது அலுவலகம்மூலம் பகிரங்கமாகத் தெரியப்படுத்தும் நிலை உருவாகும். இந்தத் திட்டம், புதுச்சேரிக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்க வழி ஏற்படுத்துகிறது. ஆளுநர் மாளிகை தலையீட்டினால்தான் இந்தத் திட்டத்தில் நிதி மேலாண்மைமூலம் கோடிக்கணக்கான ரூபாய் புதுச்சேரி அரசுக்கு இழப்பு நேராமல் தடுக்கப்பட்டது. அதேபோல, இவற்றைத் தொடர்ந்து விசாரணைகள் மற்றும் இந்திய கணக்கு தணிக்கைத் தலைவரின் ஆட்சேபங்கள் போன்றவை எழ வாய்ப்பிருக்கிறது” என்று காரசாரமாகக் கூறியிருந்தார்.

கிரண்பேடி

 

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “துறைமுகம் தொடர்பாகவும் அதைத் தூர்வாரும் பணி தொடர்பாகவும் துணைநிலை ஆளுநர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முட்டுக்கட்டை போடுகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு, மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவையாக உள்ளது. அரசின் ரகசிய செயல்பாடுகளை, ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி, சமூக  வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார் ஆளுநர். விமான சேவையில் ஊழல் நடந்துள்ளதாக அரசின் மீது வீண் பழி சுமத்துகிறார் கிரண்பேடி. ஆளுநராக பணிக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில், மாநில வளர்ச்சியில் அவரின் பங்கு என்ன?

நாராயணசாமி

மாநில வளர்ச்சியில் துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளே இல்லை. அரசு அதிகாரிகளை தரக் குறைவாக திட்டிப் பேசுகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவல்நிலைய அதிகாரி போல செயல்படுவதோடு,ஆளுநர் பதவியின் தரத்தைக் குறைத்துக்கொள்வது போல செயல்படுகிறார். புதுச்சேரி மாநிலத்தைப் பின்னே தள்ளுவதற்காக அவர் செயல்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் விவாதம்செய்ய துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் அரசால்தான் முடியும். துணைநிலை ஆளுநர் மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அரசுக்கு  அறிவுரை கூறும் அதிகாரமே அவருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் பதவிக்கு இழுக்கு சேர்க்கிறார் கிரண்பேடி” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க