வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (08/08/2017)

கடைசி தொடர்பு:16:03 (08/08/2017)

உதயச்சந்திரனுக்குப் பதில் இவரா?!

‘பள்ளிக் கல்வித்துறை செயலர் பொறுப்பிலிருந்து உதயச்சந்திரன் நீக்கப்படுவார்’ என்ற தகவல், தலைமைச்செயலகத்தில் வலம் வருகிறது.

உதயச்சந்திரந் செங்கோட்டையன்

கடந்த சில வாரங்களாக அமைச்சர் செங்கோட்டையனுக்கும் உதயச்சந்திரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் பரவியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறைக்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வி அதிகாரி ஒருவர், " பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்திவருகிறார் உதயச்சந்திரன். புதியப் பாடத் திட்டத்தை உருவாக்கும் வேலைகளிலும் அவர் ஆர்வம் செலுத்திவருகிறார். அதேநேரம், ஆசிரியர் பணி மாறுதல், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் பணிகள் ஆகியவற்றில் நேர்மையான அணுகுமுறையைக் கொண்டுவரத் திட்டமிட்டார் செயலர். இதை, பள்ளிக் கல்வித்துறையில் கோலோச்சும் ஒப்பந்ததாரர்கள் ரசிக்கவில்லை. 'செயலரை நீக்கியே ஆக வேண்டும்' என சேலத்தைச் சேர்ந்த அந்த நபர்கள், முதல்வரை சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது. நேற்றும் முதல்வரிடம் இதுகுறித்து கட்சி நிர்வாகிகளே கேட்டுள்ளனர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ' நான் அப்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அமைச்சருக்கும் அவருக்கும் இடையில்தான் ஏதோ மோதல்' எனப் பதில் அளித்திருக்கிறார். ‘உதயச்சந்திரனை நீக்கக்கூடாது’ என அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வருவதால், தற்காலிகமாக அந்த முடிவைத் தள்ளிப்போட்டுள்ளனர். இருப்பினும், ' செயலரை மாற்றியே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் அமைச்சர்” என்றார்.