வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (09/08/2017)

கடைசி தொடர்பு:09:13 (09/08/2017)

சீனாவுடன் போர் மூண்டால் என்னாகும்? இந்தியாவும் 25 பிரச்னைகளும்!

போர் ஆயத்தப் பணிகளில் இந்திய வீரர்கள்

போர்முனையில் இந்தியாவைச் சந்திக்கும் முடிவை 50 ஆண்டுகளுக்குப் பின் சீனா எடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்திய ராணுவம் 'மிகவும் வீக்' என்று இந்திய சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கை, சீனாவைக் கொதிக்கவிடும் புத்தமதத் துறவி தலாய் லாமாவின் இந்திய சுற்றுப்பயணம், 100 ஆளில்லாப் போர் விமானங்களைக் கேட்டு, அமெரிக்காவிடம் (2015, டிசம்பர்) இந்தியா கொடுத்த முன்பணம் (மதிப்பு ரூ.13,261 கோடி) என அண்மைக்கால காரணங்கள் கொஞ்சம் இருக்கின்றன. ஐம்பதாண்டு காலமாகவே இரு நாடுகளுக்கும் இடையே அவரவர் எல்லையில் சில சதுர கிலோ மீட்டர்கள் பறிக்கப்பட்டதாக எழுந்த பஞ்சாயத்தும் ஒருகாரணம் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

எல்லையில் பதற்றம் உண்மையா ?

                       இந்தியாவின் கம்பீரம் ஐ.என்.எஸ். கப்பல்

எப்போதும்போல (?!)  சாதாரணமாகத்தான் இந்தியாவும், சீனாவும் மாறி, மாறி எச்சரிக்கை செய்துகொண்டு, அறிக்கை விடுவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்தமுறை விவகாரம் படுசீரியஸாகப் போய்க் கொண்டிருக்கிறது. "சிக்கிமை ஒட்டியுள்ள 'டோக்லாம்' பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்ததை நம்முடைய ராணுவம் தடுத்து நிறுத்தியது. எல்லையில், சீனா ராணுவப்படைகளைக் குவித்தது. அதோடு சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வர முயற்சித்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது" என்றுதான் இந்தியத் தரப்பில் முதலில் செய்தி வெளியானது. இந்திய எல்லையைக்காக்க ராணுவம் உஷார் படுத்தப்பட்ட நிலையில், "இந்தியா தனது படைகளை எல்லைப்பகுதியில் இருந்து திரும்ப அழைக்க வேண்டும்; இல்லையென்றால் மோசமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்படும்" என்று சீனா எச்சரித்தது. மேலும், "பாகிஸ்தான் அனுமதித்தால் காஷ்மீரில் சீன ராணுவம் நுழையும்; திபெத் பகுதியில் சீன வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்" என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக சீனா பரப்பி, இந்தியாவுக்குத் திகிலைக் கூட்டியது.உளவியல் முறையில் தாக்கும் போர்த் தந்திரங்களில் இதுவும் ஒன்றுதான் என்றாலும், சீனாவுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எந்தவிதப் பதிலடியும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான், இந்திய ராணுவத்தில் ஆயுதப்பற்றாக்குறை நிலவுவதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை (சி.ஏ.ஜி) போட்டு உடைத்தது.

சிக்கலைக் கொடுத்த சி.ஏ.ஜி.அறிக்கை

                   இந்தியாவின் போர் விமானங்கள்

"போர் வந்தால் 10 நாள்கள் வரைதான் நம்மிடம் உள்ள ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும்" என்று இந்திய ராணுவத்தின் பலவீனம் மிக விரிவாகவே பந்தியில் வைக்கப்பட்டது. அடுத்ததாக 'மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்களையே பயன்படுத்த முடியும். போர் ஏற்பட்டால் 10 நாள்களுக்கு இந்த ஆயுதங்கள் தாங்காது. ஆயுதப்பற்றாக்குறை காரணமாக ராணுவப் பயிற்சியின் கால அளவும் குறைக்கப்பட்டது' என்று  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள், இந்தியாவின் எதிரி நாடுகளுக்குத் தேனாய் இனித்தது. இருநாடுகளின் 'கொரில்லா' அணுகுமுறைகள், அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கை என்று இன்னும் பல விஷயங்கள் போருக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன. அவை பாமரர்களின் கண்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. போர் வந்தால் என்னாகுமோ என்ற கவலையே அவர்களைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்தியர்கள் மனநிலை

'சைனாக்காரன் நம்ம ஊர்ல குண்டு போட்டப்போ, வீட்ல எண்ணெய் விளக்குங்களை அணைச்சுப் போட்டுட்டு அப்படியே சோறு தண்ணி இல்லாம கிடந்தோம்' என்று கடந்த காலத்தை நினைவூட்டும் எண்பதைக் கடந்த முதியோர்களின் கண்களில் அந்த பீதி இன்னும் மறையவில்லை. சீனாவில் இருந்துதான் குண்டுவீசிக் கொல்ல வேண்டும் என்ற நிலையில் இந்திய மக்கள் இல்லை. ஆளும் அரசுகளின் கொள்கை முடிவுகளாலும், ஆட்சியாளர்களின் ஆடம்பரச் செலவுகளை நேர்செய்ய மக்கள்மீது விழுந்த கூடுதல் வரி, வட்டி போன்ற சுமைகளாலும் ஏற்கெனவே எண்பது சதவீத இந்தியர்கள்  நடைப் பிணமாகத்தான் இருந்து வருகின்றனர். இந்தியாவைத் திணறவைக்கும் அளவிலான 25  முக்கியப் பிரச்னைகள் என்றே பட்டியலிடலாம்... இவற்றை சரிசெய்யவே உரிய தீர்வுகள் கைவசம் இல்லாத நிலையில், சீனாவுடன் போர் மூண்டால் இந்தியாவின் பொருளாதாரம் உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் கேள்விக்குறிதான்.

இந்தியாவின் 25 பிரச்னைகள்
                                         தமிழ்நாட்டில் தனி  கவனம்

(1) பென்சன் வட்டி விகிதம் குறைப்பு, அதிலேயே விதிமுறை மாற்றங்கள், (2) பெட்ரோல், டீசல் வரி 200 சதவிகித உயர்வு, (3) புதிய வரிகள், (4) புதிய வங்கிக் கட்டணங்கள்,  (5) ரயில்கட்டணம்,(6) கியாஸ்,(7) மருந்துப் பொருள்கள் விலை உயர்வு என்று அடிமேல் அடி விழ பாதாளத்தில் கிடக்கிறது இந்தியன் கோவணம். இதுபோக, (8) எஸ்.பி.ஐ. வங்கியில் மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் ரூபாய், (9) மாட்டுக் கொள்கை, அந்தக் கொள்கையால் விழுந்த கொலைகள்,  (10) நீட் தேர்வு, (11)  ரேஷன் மானியம் நிறுத்தம், (12) விவசாயிகளின்  நிர்வாணப் போராட்டம், (13) ஆதார் வேணுமா- வேண்டாமா? இப்படி மூச்சு முட்ட அணிவகுக்கின்றன அடுத்தகட்ட குளறுபடிகள்... இவ்வளவுதானா என்று  நிமிரவேண்டாம்,  வரிசைப்படி இதோ மூன்றாவது பட்டியல் : (14) அந்நிய நேரடி முதலீடு, (15) தூய்மை இந்தியா திட்டம், (16)பெரு முதலாளிகளின் வாராக்கடன், (17) ராணுவத்திற்கான உணவில் முறைகேடு, (18)  மேக் இன் இந்தியா,(19) டிஜிட்டல் இந்தியா, (20) நிலம் கையகப்படுத்தும் மசோதா,(21) ஸ்மார்ட் சிட்டி,(22) ஜி.எஸ்.டி, கார்ப்பரேட் சாமிகள்  ஊக்குவிப்பு, ஆசிரம வேள்விகளுக்கு மலையடிவாரத்தில் இடம் ஒதுக்கீடு, (23) கங்கையைச் சுத்தப்படுத்த ரூ. 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, (24) பாடப் புத்தகங்களில் மாற்றப்பட்ட வரலாறு (25) அதானி குழுமத்தினர் சாலையோர சால்னா கடை போட்டு பிழைத்துக் கொள்ள இந்திய வங்கிகள் கொடுத்த 72 ஆயிரம் கோடி கடன்...

போருக்குப்பின் என்னாகும் இந்தியா !

இப்படி அடிப்படை பிரச்னைகளாக ஒவ்வொர் இந்தியன் முதுகிலும் இந்த 25 முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன... இது தவிர, பிரதம மந்திரியின் ஓயாத வெளிநாட்டுப் பயணம், பிரதமரின் கோடி ரூபாய் கோட்டு, மாநில அரசியலுக்குள் தலையீடு (ஏழு துண்டுகளான தமிழக ஆளுங்கட்சி) என உள்ளத்தால் தினமும் குமுறிக் குமுறி சாகக் கூடிய 100 பிரச்னைகள் கண்முன் நிற்கின்றன... ஒன்று போனால், அதை விடப் பெரிதாக இன்னொன்று வந்து மிரட்டுகிறது. 500 மற்றும் ஆயிரம் ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு என்பதை சிறிதாக்கிய ஆதார்  அறிவிப்பைப் போல !முதியோர், மருந்துகளுடனே உயிர்வாழும் நோயாளிகள், குழந்தைகள், மாணவர்களின் கல்வி, கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் விளைநிலங்கள், ஆறு-ஏரிகள், பிழைப்பிற்காக வெளிநாடுகளில் சென்று தங்கியிருக்கும் இந்தியர்கள் என்று ஒரு போருக்குப் பின்னே பல நூறு பரிதாபங்கள் மறைந்திருக்கின்றன. எனவே, சீனா போன்ற எதிரிநாடுகள் குண்டு போட்டுத்தான் மக்களைக் கொல்லவேண்டும் என்பதில்லை...'குண்டு போடப் போகிறோம்' என்று சொன்னாலே போதும். அதையே காரணம்காட்டி, பல நூறு நாள்களுக்கு மக்களை வெளியில் விடாமல், அன்ன ஆகாரமில்லாமல் கொன்றுவிடும் வேலையை மத்திய-மாநில அரசுகள் சர்வ சாதாரணமாக நிறைவேற்றிவிடும். மொத்தத்தில் மக்கள்தான் பாதிப்பை உணர்ந்தும், அதை வெளிக்காட்ட முடியாமல் சாகப்போகும் ஏமாளிகள்!


டிரெண்டிங் @ விகடன்