Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸப் வன்முறைகள் கண்ணுக்குத் தெரியலையா!?- கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள் !

வன்முறைகள்

ழக்கம்போலவே அதிகாலையில் அன்றைய நாளிதழைப் புரட்டினோம். 'சென்னையில், நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து நகைகளை பறித்துச் செல்கிறது கொள்ளைக் கும்பல்' என விரிவாக எழுதப்பட்ட செய்திக்கு சற்றே அடுத்தப் பக்கத்தில், 'கடந்த மூன்றாண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன' என தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள செய்தியும் கண்ணில்பட்டது. தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகம் (State Crime Record Bureau-SCRB) வெளியிட்ட அந்த புள்ளிவிவரங்களுக்குள் ஊடுருவினோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Women-CAW)  என்ற பிரிவின் கீழ், காவல்நிலையங்களில் பதிவான வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் அவை :

ஆண்டு           பதிவான வழக்குகள் 

2014                    5,479

2015                     4,922

2016                     3,551

2017 

(ஜூன் வரை)     1,735

என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில்,சென்னையில் முறையே 2014-ல் 617 வழக்குகள் பதிவாக, 2015-ல் 317 ஆகவும், 2016 ல் 289 வழக்குகளாகவும் குறைந்துள்ளன என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் 2014-ல் 471 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2017-ல் அது 286 (ஜூன் வரை) வழக்குகளாகக் குறைந்துள்ளது என்றும், வரதட்சணை கொலை வழக்குகள் 2014-ல் 95-ஆக இருந்தது, 2017 -ல் 38-ஆகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக பாலியல் துன்புறுத்தல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் என பலவற்றையும் வகைப்படுத்தி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2014-ஐ விட 2017-ம் ஆண்டில் சீரான அளவில், குற்றங்கள் குறைந்து வந்துள்ளன என்பதே வழக்குப்பதிவுகள் குறித்து மா.கு.ஆ.கா-தமிழ்நாடு வெளியிட்டுள்ள தகவல்களின் சாரமாகும். 

"ஈவ் டீசிங் போன்ற குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூலம் அவர்களை தவறு செய்வதில் இருந்து தடுத்தோம். குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளை மார்க் செய்து அங்கு பெண் காவலர்களின் பங்களிப்போடு தொடர்ந்து கண்காணிப்பு செய்ததோடு, அப்பகுதிகளில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் உருவாக்கினோம். குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை மன மாற்றமடையச் செய்யும் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததன் வெளிப்பாடே, கணிசமான அளவில் குற்ற வழக்குகள் குறைந்ததற்காக காரணம்" என பெருமிதத்தோடு பேசினார் நமது நட்பில் உள்ள காவல்துறை உயரதிகாரி. 

உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டனவா? கேள்வியோடு ஊடகவியலாளர் சோனியா அருண்குமாரைத் தொடர்பு கொண்டோம்.

"ஓர் ஊடகவியலாளராக மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவும் இந்தச் சமூகத்தைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாக உணர முடிவதில்லை. இன்றும் நாளிதழைத் திறந்தால், 'காதலிக்க மறுத்ததால் பெண் படுகொலை செய்யப்பட்டார்' என்ற செய்திகளைப்  பார்க்கிறோம். நந்தினி முதல் குட்டிக் குழந்தை ஹாசினி வரை பாலியல் வன்புணர்வில் பலியானவர்களின் பட்டியல் நீளமாக உள்ளது. சமீபத்தில் கூட மன்னார்குடியில் திவ்யா என்ற பெண், கணவன் குடும்பத்தால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு,கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. வாட்ஸப் வழியாக பெண்களுக்கு எதிரான வசைபாடுகள் எல்லாம் வெளிவருவது உங்களுக்குத் தெரிவதில்லையா? வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் மொழிகள் பகிரப்பட்டு, பல பெண்கள்  துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இவற்றையெல்லாம் சைபர் க்ரைம் வழக்குகளாக முறையாகப் பதிவு செய்தால், இந்த புள்ளிவிவரங்கள் எகிறிவிடும். ஒருமுறை சைபர் க்ரைம் புகார் கொடுக்கச் சென்றபோது, 'இந்தமாதிரி மெசேஜ்களை பெருசா எடுத்துக்காம ஸ்கிப் பண்ணிட்டுப் போங்க. இல்லை நம்பர் மாத்திட்டா போதும்' என ஒரு காவலர்  கூறினார். இது என் நெருக்கமான தோழி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம். ஒரு சில ஆண் காவலர்கள் பிரச்னையைத் தீர்த்து உதவ முயற்சித்தாலும், அவர்கள் அறியாமலே, அவர்களுக்குள் உள்ள ஆண் மனோபாவம், பெண்களின் வலியை, பெண்கள் அளவுக்கு உணர்ந்துகொள்வதில்லை.  இங்கே சமூகத்திலும், 'ஊர் அப்படித்தான் இருக்கும். நாமதான் பார்த்து நடந்துக்கணும். அதுதான் நமக்கான தற்காப்பு ' என அறிவுரைகள் வழங்கப்பட்டு, பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்கும் பணிகளே அரங்கேறி வருகின்றன. ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றிப் பெண்களை சக உயிராக, சமூக இயக்கத்தில் சமமான பாலினமாக மதிக்கும்  ஆணினத்தை உருவாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும். அதுவே, உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான குற்றம் நிகழாத சமூகத்துக்கான அச்சாரமாக அமையும்" என்றார் பொறுப்புணர்வோடு.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசியத் துணைத் தலைவர் தோழர் உ.வாசுகியிடம் பேசினோம்.

உ.வாசுகி

"தனக்கு ஏற்பட்ட குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க, 20-க்கும் மேற்பட்ட முறை உடுமலை காவல் நிலையம் சென்றுவிட்டார் ஒரு பெண். ஆனால், அங்குள்ள காவலர்கள்  புகாரை வாங்கவே இல்லை. இறுதியாக அவர் எங்க சங்கத்திடம் முறையிட, எங்க தோழர் சசிகலா புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றார். அப்போது, 'நான் ஒரு குற்றவாளியை விசாரிச்சுக்கிட்டு இருக்கிற நேரத்துல நீ எப்படி நேரா போலீஸ் ஸ்டேஷன் உள்ள வந்து, என்கிட்ட புகார் தரலாம்' என எங்கத் தோழரைப் பிடித்துத் தள்ளிவிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் மீதே வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. மறுபுறம் எங்கள் சக தோழர் கலைவாணியின் மகள் (7 மாத கர்ப்பிணிப் பெண்) வீட்டுக்கு நள்ளிரவு 12 மணியளவில் சென்ற சில காவலர்கள், அவரின் அம்மா கலைவாணி புகைப்படத்தைக் காண்பித்து, 'இந்த குற்றவாளியோட வீடு எங்க இருக்கு?' என்று கேட்டு மிரட்டியுள்ளனர். உளவியல் அச்சுறுத்தல் செய்துள்ளனர்.  இவையனைத்தையும் சேர்த்து நாங்கள் காவல்துறை மீது கொடுத்த புகார் மீது இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.  பாலியல் ரீதியாகப் பேசினாலே ஐ.பி.சி-படி குற்றம். இன்றும் போராடும் பல போராளிப்  பெண்களைப் பாலியல் ஆபாச மொழிகளால்தான் காவல்துறை திட்டுகிறது. சாமளாபுரத்தில், உயிரைக் கொல்லும் அரசு மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணை, ஒரு டி.எஸ்.பி கன்னத்தில் அறைந்து தாக்கினார். ஆக, இப்படியெல்லாம் சட்டவிரோதமாகவும், மனிதகுல விரோதமாகவும் நடந்துகொள்ளும் காவல்துறை மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு முறையாக எப்.ஐ.ஆர் போடட்டும். அப்போது தெரியும் உண்மையான புள்ளிவிவரங்கள்" என்றவர், "பல புகார்களில் எப்.ஐ.ஆர் போடப்படுவதில்லை. பல குடும்ப வன்முறை வழக்குகளில் பேசிப் பஞ்சாயத்து நடத்தி இறுதியில், பெண்ணையே பொறுத்துப்போகும்படி நிர்பந்தம் செய்கிறார்கள். இந்தச் சமூகமே ஏற்றத்தாழ்வோடு இருக்கும்போது, இந்த இடைவெளிகளை நீக்க வேண்டுமானால், சமூக, அரசியல், பொருளாதார, சமத்துவப் பார்வையோடு அனைத்தையும் அணுகவேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத சமூகம் அமையும்" என்றார் உணர்வோடு.

'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் கண்ட தேசத்தில், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களே வெளியேறு' என்ற இயக்கம் தொடங்கவேண்டிய நேரமிது!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement