நிலவேம்பு கசாயம் குடித்தால் தங்கம் பரிசு! அ.தி.மு.க பிரமுகரின் அதிரடி ஆஃபர்!

நிலவேம்பு போஸ்டர்

நெல்லை மாநகரில் நிலவேம்பு கசாயம் குடித்தால் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அ.தி.மு.க பிரமுகர் அதிரடியாக அறிவித்துள்ளார். சில்வர் குடம் உள்ளிட்ட ஆறுதல் பரிசுகளையும் வழங்குவதாக அறிவித்திருப்பது பொதுமக்களை ஆர்வம் கொள்ள வைத்துள்ளது.

அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் நல்லெண்ணத்தை வளர்க்க பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது இயல்பு. அந்த வகையில் நெல்லையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான தங்கதுரை என்பவர், டெங்கு பாதிப்பிலிருந்து மீளும் வகையில் நிலவேம்பு கசாயத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதுடன், அதைக் குடித்துப் பயன் அடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டவர் தங்கதுரை. பழக்கடை வியாபாரம் செய்து வரும் அவருக்கு அப்பகுதி மக்களிடம் நல்ல நெருக்கம் உள்ளது. மக்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் அவர்களின் தேவைகளுக்காக அதிகாரிகளைச் சந்திப்பது, குடிநீர்த் தேவைகளைத் தீர்த்து வைக்க குரல் கொடுப்பது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கொக்கிரகுளம், குறுந்துடையார்புரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால், இந்தப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில், வரும் 11-ம் தேதி முதல்13-ம் தேதி வரை நிலவேம்பு கசாயம் விநியோகிக்கும் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதில், தினமும் கசாயம் குடிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், மூன்று நாள்களும் நிலவேம்பு கசாயம் குடித்தவர்களில் இருந்து கடைசி நாளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்குத் தங்கம் பரிசாக அளிக்கப்படவிருக்கிறது. முதல் பரிசாக ஒரு கிராம் தங்கமும், 2-ம் பரிசாக அரை கிராம் தங்கமும் பரிசாக அளிக்கப்படவிருக்கிறது. மூன்றாம் பரிசாக 10 கிராம வெள்ளி பரிசாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கொக்கிரகுளம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இவற்றை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிடுவதுடன், பிறருக்கும் இதுகுறித்து தெரிவித்து வருகின்றனர். அதனால் நிலவேம்பு கசாயம் முகாம் நடைபெறும் தினத்தில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!