தண்ணீருக்காக ஊருக்குள் வந்த புள்ளிமானுக்கு நேர்ந்த கொடூரம்!

காட்டில் தண்ணீர் இல்லாமல் கிராமத்தில் நுழைந்த புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின. நாய்களிடமிருந்து மானைக் காப்பாற்றி சிகிச்சைக்காக வனத்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் பாலம்பாடி கிராமத்துக்கு அருகில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இக்காட்டிலிருந்து தண்ணீரைத் தேடி புள்ளிமான்  ஒன்று கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது தெருவில் இருந்த நாய்கள், மானை விரட்டிச் சென்று கடித்தது. இதைப் பார்த்த நாகராஜ் மற்றும் கிராம மக்கள்,  நாய்களை விரட்டிவிட்டு வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து காயமடைந்த புள்ளி மானுக்கு அரியலூர் கால்நடைமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர் பெண் புள்ளிமான் என்றும் அதன் வயது ஒன்றரை இருக்கும் எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் மானை கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ஜீப்பில் கொண்டு சென்றனர். காயம் குணமடையும் வரையிலும் மானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனவிலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் நுழையாமல் இருக்க வனப்பகுதியில் தண்ணீர் குட்டை அல்லது தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!