வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (08/08/2017)

கடைசி தொடர்பு:17:16 (08/08/2017)

திவாகரனின் மூன்று நிபந்தனைகள்..! தினகரன் சொன்னது என்ன?

அ.தி.மு.க தங்கள் கையை விட்டுப்போகக்கூடாது என்பது சசிகலா குடும்பத்தினரின் சபதம். சுமார் 247 கோடி ரூபாய் அசையா, அசையும் சொத்துகளைக் கொண்டது இந்தக் கட்சி. ஆட்சி அதிகாரத்தை விட, கட்சியில் கோலோச்சுவதே... நிரந்தரமானது என்பது சசிகலா குடும்பத்தினருக்கு நன்றாகவே தெரியும். கடந்த சில மாதங்களாக, அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட விரும்பியபோது, 'நம் குடும்பத்தினர் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இப்போதைக்கு வேண்டாம். பிறகு பார்க்கலாம்' என்று சொன்னார் திவாகரன். ஆனால், தினகரனோ இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா அனுமதி கொடுத்துவிட்டார் என்று சொல்லி, தேர்தலில் போட்டியிட்டார். தினகரனின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாகக் கண்டித்தார் திவாகரன்.

தினகரன் - திவாகரன்

தேர்தல் விளம்பரங்களில்கூட சசிகலாவின் பெயர், புகைப்படம் இரண்டையும் தவிர்த்தார் தினகரன். இதனால், கடும் எரிச்சலடைந்தார் திவாகரன். அடுத்து, தினகரனின் நிழல் போல கட்சி விவகாரங்களில் செயல்பட்ட தளவாய் சுந்தரத்தின் நடவடிக்கைகள் சரியில்லை. அவரை ஒதுக்கிவைக்கவும் என்று திவாகரன் சொன்னார். இதையும் தினகரன் கேட்கவில்லை. தளவாய் சுந்தரத்தை அவரது அட்வைஸர் போல வைத்துக்கொண்டார். இதுமாதிரி விஷயங்களில் கடுப்பான திவாகரன், தினகரனின் அரசியல் எதிரி ஆனார். இந்த நிலையில், எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணையவேண்டும் என்று தினகரன் நாள் கெடுவிதித்தார். அந்தக் கெடு முடிந்தும் இருவரும் சேரவில்லை என்றதும், தீவிர அரசியலில் குதித்தார். இதற்கிடையில்,  தினகரனின் மாமியார் சந்தானலட்சுமி தஞ்சையில் இறந்துபோனார். இந்த துக்க நிகழ்ச்சியில், தினகரனும் திவாகரனும் நேரில் சந்தித்து சில விஷயங்களை மனம் பேசினர்.

அப்போது திவாகரன் போட்ட கன்டிஷன்களுக்கு சம்மதம் சொன்னாராம். ஒன்று, சிறைச்சாலையில் இருந்து சசிகலா திரும்பி வரும்வரையில்தான், துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கவேண்டும். அவர் வந்ததும், பொறுப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு விலகிவிட வேண்டும். இரண்டாவது கண்டிஷன்... தளவாய் சுந்தரத்தை அருகில் வைத்துக்கொள்ளக்கூடாது. மூன்று....எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கட்சி சார்பில் நடத்தவேண்டும். அரசு விழாவாக நடத்தக்கூடாது என்று எடப்பாடியிடம் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆட்சியில் வேண்டுமானால் இருந்துகொள்ளுங்கள். தப்பித்தவறி கூட அ.தி.மு.க-வின் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று பி.ஜே.பி. மேலிடம் மிரட்டியிருந்ததால், பயந்துவிட்டார். கட்சி விழாவாக கொண்டாடினால், அதில் சசிகலா பெயர் இடம்பெறவேண்டுமே. அதனால்தான், எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவை அரசு விழா போல் நடத்தினார். சசிகலா பெயரைத் தவிர்த்தார். எடப்பாடிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கட்சி விழாவாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடவேண்டும். இந்த மூன்று கன்டிஷன்களுக்கு தினகரன் ஒப்புக்கொண்ட பிறகே, திவகாரன் தினகரனுடன் கைகுலுக்கினாராம். இருவரும் மீடியாக்களைச் சந்தித்ததும் கூட இந்த ஒப்பந்தத்துக்கு பிறகுதான்! 

இதுபற்றி திவாகரன் தரப்பினரை கேட்டபோது, " கட்சிக்கு இத்தனை வருடமாக ஆக்டிவ்வாக வேலை பார்த்தவர்களை ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் அமைச்சர்கள் இருட்டடிப்பு செய்தனர். அவர்களின் உழைப்பை இவர்கள் சுரண்டி ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் தக்கவைத்துக்கொண்டனர். பாவம்... ஃபீல்டில் உழைத்த கட்சி பிரமுகர்கள் இதுநாள் வரை எந்தப் பதவியும் இல்லாமல் இருந்துவந்தார்கள். அப்படிப்பட்டவர்களை லிஸ்ட் எடுத்து திவாகரன், தினகரனிடம் கொடுத்து கட்சிப்பதவிகளை வழங்கச் சொன்னார். இவர்கள் கட்சி வேலையைப் பார்க்க ஆரம்பித்தால், எதிர்கட்சியினரே மிரண்டு விடுவார்கள். சமுதாயத்தில், பணப்பலத்தில் செல்வாக்கு உள்ளவர்கள். தினகரனும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றவர்களுக்கு கட்சிப் பதவிகளைத் தந்துவிட்டார். கட்சி வளர இது ஆரோக்கியமான சூழ்நிலை" என்கிறார்கள்.

தினகரன் தரப்பினரைக் கேட்டபோது,  "திவாகரன் ஒத்துழைப்பு எங்களுக்கு இந்த சூழ்நிலையில் தேவை. அதனால்தான், அவரைப் பயன்படுத்திக்கொண்டோம். ஆறு ஊர்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவை பிரமாண்டமாகக் கொண்டாடுவதுதான் எங்கள் பிளான். அங்கு கூடும் கூட்டத்தைப் பொறுத்து எங்கள் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும்" என்கிறார்கள். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க