வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (08/08/2017)

கடைசி தொடர்பு:18:14 (30/06/2018)

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 4 டன் எடை திமிங்கலம்!

பாம்பன் தென்கடல் பகுதியில் 4 டன் எடை கொண்ட புள்ளித் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

உலகில் 75 வகையான திமிங்கலங்கள் உள்ளன. இவை எல்லாமே பாலூட்டி நுரையீரலுடன் கூடிய பாலூட்டி இனமாகும். இவை மற்ற கடல்வாழ் உயிரினங்களைப் போல் செவியால் சுவாசிப்பதில்லை. மாறாக கடலின் மேற்பரப்புக்கு வந்து காற்றினை அதன் மூக்கு வழியாக உள் இழுத்து சுவாசிக்க கூடிய தன்மை கொண்டவை. இந்தத் திமிங்கலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் அடி வரை ஆழமாகச் சென்று இரை தேடும் ஆற்றல் உடையவை. 100 ஆண்டுகள் வரை வாழும் இவை அதிக எடையைக் கொண்டிருந்தாலும் விரைவாக நீந்தும் தன்மை பெற்றவை. இத்தகைய திமிங்கலங்களில் ஒன்றுதான் புள்ளித் திமிங்கலம்.

பாம்பன் கடலில் மிதந்த புள்ளி திமிங்கலம்

மன்னார் வளைகுடா கடலின் ஆழமான பகுதிகளில் வாழும் இந்தப் புள்ளித் திமிங்கலங்களில் ஒன்று இன்று பாம்பன் தென் கடல் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து மண்டபம் வன உயிரினக் காப்பக அலுவலர்கள் பாம்பன் ரயில் பாலத்தின் அடியில் உள்ள கடல் பகுதியில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றைக் கட்டி மீனவர்களின் உதவியுடன் கரைக்குக் கொண்டு வந்தனர்.
கரைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தத் திமிங்கலத்தின் எடை சுமார் 4 டன் .16 அடி நீளமும், 10 அடி சுற்றளவும் கொண்ட இந்தத் திமிங்கலம் பாறைகளில் மோதியோ அல்லது மீனவர்களின் வலைகளில் சிக்கியோ உயிரிழந்திருக்கலாம் என வன உயிரின அலுவலர்கள் தெரிவித்தனர். கரைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தத் திமிங்கலத்தின் உடல் மருத்துவ உடல் கூராய்வுக்குப் பின் கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டது.