ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா: ராமநாதபுரத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை வருகிறது.


இம்மாதம் 12-ம் தேதி 2 வது சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, மறுநாள் ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் ஆகியவை தொடர்ச்சியாக வருவதால் இந்த 4 நாள்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா


இந்நிலையில் கடந்த 3-ம் தேதி ஏர்வாடி தர்ஹாவில் உள்ள ம்ஹான் குத்புல் அக்தாப் சுல்த்தான் செய்யது இபுறாஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்க தலத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பாதுஷா நாயகம் ரவுலா ஷரீஃபிற்கு சந்தனம் பூசும் நிகழ்வு ஆகஸ்ட் 16-ம் தேதி அதிகாலை நடக்கவுள்ளது. இந்நிகழ்வினை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.நடராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 16 அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அதை ஈடும் செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 19 சனிக்கிழமை பணி நாளாகக் கருதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறை தினமான ஆகஸ்ட் 16 அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!