பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்! | Lakshmipuram villagers in human chain struggle!

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (08/08/2017)

கடைசி தொடர்பு:19:25 (08/08/2017)

பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இன்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். நேற்று குத்துவிளக்கு ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது கிராம மக்கள் அனைவரும் தேனி − திண்டுக்கல் சாலையின் இருபுறமும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

முன்னதாக நம்மிடம் பேசிய கிராம முக்கியஸ்தர்கள், "கிணற்றை மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். தினமும் வெவ்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டேதான் இருப்போம். எங்கள் போராட்டத்துக்கு சுற்றியிருக்கும் கிராமங்களின் ஆதரவைத் திரட்ட இருக்கிறோம். அருகில் இருக்கும் வடபுதுப்பட்டி, வடவீரநாயக்கன்பட்டி, அம்மாபுரம், அம்மாபட்டி, சொக்கத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி,மீனாட்சிபுரம், மதுராபுரி, அழகபுரி, கிண்டிகாரன்பட்டி, செட்லூர், ஜல்லிப்பட்டி, காமுக்காம்பட்டி, சரப்பட்டி ஆகிய கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இரண்டு நாள்களில் அனைத்து கிராமங்களையும் இணைத்து பிரமாண்டமான அளவில் போராட இருக்கிறோம்" என்றனர்.

 ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சத கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்தக் கிணற்றைக் கிராமத்துக்குத் தருகிறேன் என்று உறுதி கொடுத்த பிறகு, தனது நண்பர் பெயருக்கு அந்தக் கிணற்றை எழுதிவைத்துவிட்டார். ஏமாற்றமடைந்த கிராம மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close