தேசிய கைத்தறி விற்பனை மற்றும் கண்காட்சி தொடக்கம் | National handloom sales and exhibition launched in Theni

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (08/08/2017)

கடைசி தொடர்பு:20:10 (08/08/2017)

தேசிய கைத்தறி விற்பனை மற்றும் கண்காட்சி தொடக்கம்

தேனி மாவட்டத்தில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையகத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.

கண்காட்சியைத் தொடங்கிவைத்து பேசியவர், “1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழில் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்த விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும், பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசின் கைத்தறி அமைச்சகம் நெசவாளர்களின் நலன்கருதி செயல்படுத்திவருகிறது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல பரிசுகளையும் வழங்கிவருகிறது. தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி இன்று முதல் வரும் 10-ம் தேதிவரை நடைபெறும். மதுரையின் பாரம்பர்ய சேலை ரகமான சுங்குடிச்சேலை முதல் கோடம்பாக்கம் சேலைகள் வரை பல்வேறு மாவட்டங்களின் பாரம்பர்ய சேலைகள் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.