Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இன்னும் ஆகச்சிறந்த படைப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கும்!’ - கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் குறித்து நண்பர்கள்

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், கடந்த சனிக்கிழமை அன்று காலமானார். தமிழின் முக்கியமான படைப்பாளியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ரசூல் தமிழ் இஸ்லாமியப் படைப்பாளிகளில் ஒரு கலகக்காரராகவே வாழ்ந்து மறைந்தவர். நாத்திகவாதம் பேசி, மதத்தை அவர் மறுக்கவேயில்லை. அதன் அதிகாரங்களாக அவர் உணர்ந்தவற்றை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கினார்.  ஹெச்.ஜி.ரசூல் உடன் நெருக்கமான நட்பில் இருந்த அவர் வாழ்ந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார செல்வா மற்றும் நட.சிவகுமார் இருவரும் ரசூல் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.  

ரசூல்

``ரசூல், ஒரு வானம்பாடி கவிஞராகத்தான் வெளியே வந்தார். 1980-களின் மத்தியிலிருந்து எனக்கு அறிமுகம். மார்க்சியத்தை நன்கு கற்றவர். அதன்படி சிந்திக்கக்கூடியவர். நான் குமரிப் பகுதிகளில் பின்நவீனத்துவம் பேசத் தொடங்கிய காலகட்டத்தில் அதன் கடுமையான எதிர்ப்பாளராக இருந்துவந்தார். தொடர்ந்து பின் காலனித்துவம், பின் நவீனத்துவம், பின் மார்க்சியம் எனக் கருத்தியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் அவர் மாற்றங்களை விவாதித்து ஏற்றுக்கொண்டவர். அவரைப் பற்றிய சித்திரம் என்பது இஸ்லாமியத்துள் இயங்கிய கலகக்காரராக, வஹாபிச அடிப்படைவாதத்துக்கு எதிராக நின்றவராகவே இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் விலக்கம் செய்யப்பட்ட இந்துவோ, கிறிஸ்தவரோ சமாளித்து வாழ்ந்துவிட முடியும். இஸ்லாமியராக இருந்தால், அது மிக மிகக் கடினம். ஆனால், சொன்ன சொல்லுக்காக, கலைச்செயல்பாட்டுக்காக அதை ஏற்றுக் கடந்தவர் ரசூல். அவரின் மரணம் என்பது, தமிழுக்கும் தமிழ் இஸ்லாமுக்கும் பேரிழப்பாகும்" என்றார் எழுத்தாளர் குமாரசெல்வா.  

அவரோடு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரிமாவட்டக் கிளையில் இணைந்து பணியாற்றியவர் எழுத்தாளர் நட.சிவகுமார். 

``இணையமும் முகநூலும் பரவலான பிறகு எழுத்தாளர்களின் மரணம் அதிகமாகிவிட்டதாகவே உணர்கிறேன். ரசூலுக்கு, கடைசியாக இருந்த சர்க்கரை அளவு 540. பெரும்பாலான எழுத்தாளர்கள் முகநூலிலேயே எந்நேரமும் இருப்பதால் சரியான தூக்கம் இல்லை. முதலில் அவர்கள் தங்கள் உடல்நிலையைக் கவனிக்க வேண்டும். ரசூலின் இழப்பு, தமிழின் மிக முக்கியமான ஒன்று. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக, தமிழ் இஸ்லாமியப் பின்புலம் உள்ள படைப்பாளிகளில் மார்க்சியத்தை முற்று முழுவதுமாகக் கற்று இஸ்லாமுக்கு மார்க்சியத்துக்கும் இடையில் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்தியவர். அவர் படித்த மார்க்சியம், பின்நவீனத்துவம், பின்காலனியம் போன்றவற்றை இஸ்லாமியத்துக்குள் பொருத்திப்பார்த்தவர். அவரைப்போல இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் எவரும் இல்லை. விடுதலைக் கோட்பாடு, நாத்திகவாதம் போன்றவை எல்லாம் இந்து, கிறிஸ்துவ மதங்களில் பேச முடியும். ஆனால், யாரும் பேசத் தயங்கும் இஸ்லாம் போன்ற மதங்களில் இருந்துகொண்டு துணிச்சலாக அதைப் பேசியவர் ரசூல். ஊர் விலக்கம் செய்யப்பட்டபோதுகூட தொடர்ந்து அதைச் செய்தார்.  

வானம்பாடி கவிஞராக வந்த அவரின் மொழி, கவிதையில் மாறியே வந்தது. அவர் இன்னும் 10 ஆண்டுகள் இருந்திருந்தால்,  ஆகச்சிறந்த படைப்புகள் பல வெளிவந்திருக்கும். ஆறேழு குறுநாவல்கள் எழுதி முடித்துள்ளார். அதெல்லாம் வரவிருந்த நிலையில் அவர் தவறிவிட்டார். அவரின் வீட்டார் அதை வெளிக்கொண்டுவருவார்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. அவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் வாய்ப்புகூட இருந்தது. தமிழ் இஸ்லாம் சூழலில் முஜிபூர் ரகுமானோ, மீரான் மைதீனோ, முஸ்தபாவோ ரசூல் செய்த இஸ்லாமிய பெருங்கதையாடல் கட்டுடைப்பைச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே அவர்கள் செய்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். துணிச்சல்கள் நிறைந்த ரசூல், இப்போது இல்லை என்பதை நம்புவதற்கு முடியவில்லை" என்றார் நட.சிவகுமார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement