வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/08/2017)

கடைசி தொடர்பு:21:30 (08/08/2017)

டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்: மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புஉணர்வு முகாம் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அரியலூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புஉணர்வு முகாம் நடத்தப்படுவதோடு நிலவேம்பு கசாயமும் கொடுத்துவருகிறது சுகாதாரத்துறை. டெங்கு எப்படி ஏற்படுகிறது அதைத் தடுக்க என்ன வழி என்று விழிப்புஉணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக தேங்காய் மூடி, டயா், மற்றும் உபயோகம் இல்லாத பாத்திரங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும், சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என விழிப்புஉணர்வை ஏற்படுத்தியதோடு, டெங்குவின் அறிகுறிகள் பற்றி மக்களுக்குச் சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.

* முதலில் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். சாதாரண காய்ச்சல்தானே என்று விடுவதுதான் பல சிக்கலை உருவாக்குகிறது.
* காய்ச்சலுடன் சேர்ந்த தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, உடல்சோர்வு, கருப்பு நிறத்தில் மலம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுவது நல்லது.
* காய்ச்சல் இருக்கும் பொழுது உடலில் தேவையான தண்ணீர் சத்து இருக்க வேண்டும். ஜூஸ்கள் மற்றும் தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் சோர்வடையாமல் பாதுகாக்க 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 4 டம்ளர் அளவு நீர்ச்சத்தும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 6 டம்ளர் அளவு நீர்ச்சத்தும் கொடுக்க வேண்டும்.
* மருத்துவரின் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
* காய்ச்சல் கண்டவர்கள் தேவையான அளவு சிறுநீர் கழிவதை உறுதி செய்ய வேண்டும்.
காய்ச்சலைத் தடுக்கும் முறைகள்
* வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
* குழந்தைகள் உறங்கும் பொழுதும் வெளியில் விளையாடசெல்லும் பொழுதும் முழுகால் சட்டை மற்றும் முழு கைசட்டை அணிய செய்ய வேண்டும்.
* மாலை நேரங்களில் முக்கியமாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்.