யுனெஸ்கோவின் அறிக்கை தவறு... கொதிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மை குறித்து யுனெஸ்கோ அமைப்பு, தனது ஆய்வறிக்கையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், யுனெஸ்கோ-வின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன்

யுனெஸ்கோவின் அறிக்கையில், மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் சிற்பசாஸ்திர விதியைப் பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால் கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து எனவும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடமும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஒப்புதல் பெறவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

யுனெஸ்கோவின் இந்த ஆய்வறிக்கைப் பற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையர் நடராஜிடம் கேட்டோம், 'கோயிலுடைய பழைமையான தூண்களெல்லாம் எங்கேயும் போகவில்லை. அவை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் இருக்கின்றன. யுனெஸ்கோ, எங்களிடமிருந்து எந்தக் கருத்தையும் கேட்கவில்லை. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது. மீனாட்சி அம்மன் கோயில், ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து கோயிலுக்கென்று பிரத்யேகமாக புனரமைப்புப் பணிகள் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், புனரமைப்புப் பணிகள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், கோயிலுக்கென்று இருக்கும் துறை நிபுணர்கள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, 13 பேரிலிருந்து 18 ஆக நிபுணர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்திய அளவில் பெரிய அதிகாரிகள். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான், கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் வராதபடி புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன' என்று விளக்கமளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!