கதிராமங்கலம் போராட்டம் : ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விவசாய நிலங்களை அழித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தப்படவிருக்கும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும், காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும் போராட்டங்களை நடத்தி வந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு. பின்னர், அவர்கள்மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியது. இதை அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் கண்டித்து வந்தன. தஞ்சை நீதிமன்றம் பல முறை ஜாமீன் மறுத்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பேராசிரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மற்றவர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பேரா.ஜெயராமனுக்கு மட்டும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி பொருள்களை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதம் 30 -ம் தேதி, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக  ஜெயராமன் மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஜெயராமன் உட்பட, எட்டுப் பேருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!