வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/08/2017)

கடைசி தொடர்பு:12:40 (09/08/2017)

மக்களிடம் வரவேற்பைப் பெற்ற தேனி கல்லூரி சந்தை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருள்களின் கல்லூரிச்சந்தை நடைபெற்றுவருகிறது. நேற்று மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் தொடங்கிவைத்த இந்த சந்தை, நாளை வரை நடைபெறும். இதுபோன்ற கல்லூரிச்சந்தைகள் மூலமாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருள்களை எளிமையாக சந்தைப்படுத்த இயலும்.

மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் பற்றி கல்லூரி மாணவிகள் தெரிந்துகொண்டு பயனடைய ஒரு வாய்ப்பாக இருக்கும். தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 30 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் இச்சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. செயற்கை அணிகலன்கள், அழகிய துணிப்பைகள், வாசனைத் திரவியங்கள், மென் பொம்மைகள், மகளிருக்கான ஆடை அலங்கார பொருள்கள், கைத்தறிப் புடவைகள், மூலிகை திரவியங்கள், ஓவியங்கள் மற்றும் ஏராளமான கைவினைப் பொருள்களை இந்தக் கல்லூரிச் சந்தையில் வாங்க முடியும். கல்லூரி மாணவிகளிடம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த கல்லூரிச் சந்தை.