வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (09/08/2017)

கடைசி தொடர்பு:15:15 (09/08/2017)

சசிகலா கொடுத்த சீக்ரெட் பிளான்! - தினகரனின் அதிரடி பின்னணி #VikatanExclusive

சசிகலா,தினகரன்

சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு சென்னை வந்த தினகரன், அதிரடியாக அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அடுத்து, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற, தினகரன் காய் நகர்த்திவருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறையிலிருக்கும் சசிகலாவை சில நாள்களுக்கு முன் தினகரன் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு சென்னை வந்த அவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 'ஆகஸ்ட் புரட்சி' என்ற பெயரில், கட்சியில் அதிரடிகளைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக, தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்சியில் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் தினகரன், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது, ஆட்சியைக் கவிழ்க்க அவர் சதிசெய்வதுபோல இருக்கிறது' என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக, தினகரனின் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., 'அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினருக்கு சசிகலா பொதுச் செயலாளராகிய பிறகுதான் பதவிகளைக் கொடுத்தார். அந்தப் பதவிகளை ஏன் அவர்கள் தூக்கி எறியவில்லை?' என்று கேள்வி கேட்டார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார்,தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் தினகரனின் சுற்றுப்பயணத்துக்குத் தடை விதிப்பதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. கூடவே, பன்னீர்செல்வத்தின் நெருக்கடிகளைச் சமாளிப்பதுகுறித்தும் ஆலோசிக்கின்றனர். சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகே, தினகரன் கட்சியில் அதிரடி முடிவுகளை எடுத்துவருவதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். " தினகரன் கொடுத்த 60 நாள்கள் காலக்கெடு முடிந்துவிட்டது. அதன்பின்னரும் அணிகள் இணையவில்லை. எனவே, அவர் கூறியபடியே கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. சில நாள்களுக்கு முன்பு தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலில், பதவி வழங்கப்பட்டவர்கள் சிலர், அவரை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுவருகின்றனர். அடுத்த நிர்வாகிகள் பட்டியல் தயாராகிவருகிறது. அந்தப் பட்டியல் வெளியாகினால், நிச்சயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.

சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே, நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தினகரன் முடிவுசெய்துள்ளார். தினகரனின் சுற்றுப்பயணத்துக்கு போலீஸார் அனுமதிகொடுக்க மறுத்தால், நீதிமன்றம்மூலம் அனுமதிபெறவும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக, சுற்றுப்பயணத்தில் பங்கேற்பவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவும் தினகரன் முடிவுசெய்துள்ளார்" என்கின்றனர். சசிகலா, சில முக்கியத் தகவல்களைத் தன்னிடம் சொல்லியனுப்பியுள்ளதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன் கூறியிருக்கிறார். அதில், 'அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் விரிவடைந்தால், அது நமது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் பாதிக்கும். நம்மை பலவீனப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது பா.ஜ.க. பதவிக்காக சிலர், பா.ஜ.க-வுடன் நட்பில் இருக்கின்றனர்.

 ஜெயலலிதா

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? நமது குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் முயல்வதற்கு இதுதான் காரணம். அதற்கு இடமளிக்கக்கூடாது. அ.தி.மு.க-வை ஒற்றுமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் ஓ.பன்னீர்செல்வத்திடமும் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்திப் பார். அதற்கும் அவர்கள் முரண்டுப்பிடித்தால், கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். முதற்கட்டமாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவோம். அதன்பிறகு, அடுத்த நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவோம். கட்சியை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நம்மைத் தேடிவந்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்