மோடி, அமித்ஷாவின் பருந்து பார்வை! வைகோ ஆவேசம்

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் மோடியும் அமித்ஷாவும் பருந்து பார்வை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசத்துடன் கூறினார்.
 

vaiko

சென்னை எழுப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக மோசமான நிலையை மோடியும் அமித்ஷாவும் ஏற்படுத்தி வருகிறார்கள். மோடி, அமித்ஷாவின் இந்த வேலைகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று சரியான அடியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறுக்கு வழியில் புகுந்து, அங்குள்ள அரசியல் கட்சிகளை நாசம் செய்து, மிக ஆபத்தான முன் உதாரணத்தை உருவாக்குகிறார்கள். அரசியல் நேர்மை பற்றி பேச பிரதமர் மோடிக்கு அருகதையே கிடையாது.

மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியதுபோல் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் மோடியும் அமித்ஷாவும் பருந்து பார்வை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களின் அந்த வேலை தமிழகத்தில் நடக்காது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பாசிச அரசாக மாறிக் கொண்டிருக்கிறது.  தமிழக அமைச்சர்களை காலில் போட்டு மிதிக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.

நீட் தேர்வு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யக் கூடியது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனிப் பாடத்திட்டங்கள் உள்ளன. அதை எல்லாம் மாற்றி இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதன் மூலம் பொய்யான தகவல்களை மாணவர்களின் மனதில் நஞ்சைப்போல விதைக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வுக்கு எதிராக நாளை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை  தடையை மீறி மத்திய அரசு அலுவலகம் முற்றுகை இடப்படும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!