வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (09/08/2017)

கடைசி தொடர்பு:14:10 (09/08/2017)

வேலூர் கமிஷனரைச் சிக்க வைத்த 2 சதவீத கமிஷன்! - டெங்கு ஒழிப்பில் புது ஃபார்முலா

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் ஆணையர்

வேலூர், வேலப்பாடியைச் சேர்ந்தவர் பாலாஜி. மாநகராட்சி கான்டிராக்டர். இவர், வேலூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணிகளை கடந்த ஜூன் மாதம் மேற்கொண்டார். இதற்கான தொகை ரூ.10.20 லட்சத்தை பாலாஜிக்கு மாநகராட்சி நிர்வாகம் கொடுக்க வேண்டும். இந்தப்பணத்துக்கு கமிஷனர் குமார் தரப்பில் கமிஷன் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. 

கமிஷன் கொடுக்காததால் பாலாஜிக்கு 'செக்' கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இதனால், கேட்ட கமிஷன் கொடுப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலாஜிக்கு செக் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் தன்னிடம் கமிஷன் கேட்டத் தகவலை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பாலாஜி ரகசியமாக தெரிவித்தார். அதன்பேரில் மாநகராட்சி கமிஷனர் குமாரை கையும் களவுமாக பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக இன்று காலை கமிஷனர் குமாரிடம் பணத்தை கொடுப்பதாக பாலாஜி உறுதியளித்தார். அதற்கு முன்பதாக  பாலாஜியிடம் ரசாயன கலவை தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனர். அந்தப்பணத்துடன் பாலாஜி, கமிஷனர் அறைக்குச் சென்றார். அப்போது, பணத்தை வாங்கிய கமிஷனர் குமாரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து இரண்டு மணி நேரமாக அவரிடம் விசாரணையை போலீஸார் நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கான்டிராக்டர் பாலாஜி கொடுத்த தகவலின்படி கமிஷனர் குமாரைப் பிடித்துள்ளோம். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் ரசாயன கலவையைத் தடவி பாலாஜியிடம் கொடுத்து அனுப்பினோம். அந்தப் பணத்தை குமார் பெற்றுள்ளார். பணத்தில் அவரது கைரேகைப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. லஞ்சம் வாங்கிய கமிஷனர் குமாரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்" என்றனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு கொசுவின் தாக்கம் அதிகரித்தப்படியே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு கொசு ஒழிப்புக்காக மாநகராட்சி ஆணையாளரே லஞ்சம் வாங்கிய செயல், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ' மாநிலம் முழுவதும் டெங்கு ஒழிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்' எனக் குரல் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

படம்: வெங்கடேசன்