டெங்கு கொசு எப்போது கடிக்கும்! அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

டெங்கு கொசுக்கள் எப்போது கடிக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், பலி எண்ணிக்கையும் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. இன்று மட்டும் நாமக்கல், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சேலம் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல தரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிக்க மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நன்னீரில் உருவாக்கக்கூடிய டெங்கு கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு என்ற நிலை இருக்கக்கூடாது. 10 நாள்களுக்குள் காய்ச்சல் பரவுவது 100 சதவிகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். தமிழகத்தில் மர்மக் காய்ச்சல் என்பதே கிடையாது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. காய்ச்சல் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!