"காதலில் பிரச்னையா... இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க..!?" - அரசாங்க அறிவிப்பு

காதலர்களுக்கு பாதுகாப்பு தனி பிரிவு

'சொர்க்கம் நரகம் 

இரண்டில் ஒன்று 

இங்கேயே நிச்சயம் -

காதலித்துப்பார் !'

- என்பார் கவிஞர் வைரமுத்து. 

சாதி மாறி காதல் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நரகத்தை மட்டுமே நிச்சயப் பரிசாகத் தந்துகொண்டிருக்கிறார்கள் சாதி வெறியில் ஊறித் திளைத்திருக்கும் நம் ஊர் பெற்றோர்கள்! இதனை அவர்கள் 'கௌரவக் கொலை' என்று பெருமிதமாகக் கூறிக்கொண்டாலும், அது 'சாதி ஆணவப் படுகொலை'யாக மானுடத்தின் மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான பண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பயணத்தில் முதல் வெற்றிப்புள்ளியை நீதிமன்ற உதவியோடு பெற்றுள்ளது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஆம், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்க காவல்துறையில் சிறப்பு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ''மதுரை, மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த அலுவலகம், காதலித்து திருமணம் செய்தவர்களுக்கான பாதுகாப்பிடமாக நிச்சயம் இருக்கும்'' என்கின்றனர் மதுரை காக்கிகள். இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கே.சாமுவேலிடம் பேசினோம்.

ஆணவ கொலைகளுக்கு எதிரான நடைப் பயணம்

"2014-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி, மதுரை உசிலம்பட்டியில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார் விமலாதேவி. அவர் கணவர் திலீப்குமார் உயிருக்கும் ஆபத்து இருந்ததால், அவருக்கு பக்கபலமாக எங்கள்  அமைப்பு நின்றது. 'வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் சாதி ஆணவப் படுகொலையை தடுக்கும்வகையில் அரசு தனிச் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். சரியாக 2016 ஏப்ரல் 13-ம் தேதி, சி.பி.ஐ விசாரிக்க அனுமதியளித்தது நீதிமன்றம். மேலும் 'மாவட்ட எஸ்.பி தலைமையில் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர், சமூகநலத் துறை அலுவலர் என  மூன்று பேர் கொண்ட சிறப்புப் பிரிவு, அனைத்து  மாவட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டு, 9 வழிகாட்டுதல்களையும் வழங்கினார் நீதிபதி ராமசுப்பிரமணியம்.

அதில், 1) காதலித்தவர்கள், தங்களுக்கு பெற்றோர் மூலமாகவோ அல்லது வேறு எந்தவகையிலாவது பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால், அவர்கள் உடனே புகார் தருவதற்கு வசதியாக ஒரு டோல் ஃப்ரீ நம்பர் அறிவிக்கப்பட வேண்டும். 

2) இதில் கூறப்படும் புகாரை, உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். 

3) அவர்கள் உடனடியாக காதல் தம்பதியினருக்கு பாதுகாப்பு தரவேண்டும். 

4) அவர்களுக்கு தற்காலிக புகலிடம் அமைத்துத் தரவேண்டும். 

5) அதற்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். காதலர்களை எதிர்க்கும்  பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். 

6) இந்தப் பிரச்னையில் அதிகாரிகள் ஏதேனும் தவறிழைத்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள்  இடம் பெற்றிருந்தன. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் சிறப்புப் பிரிவை,  தமிழ்நாடு அரசு, மூன்று மாதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டார். மூன்று மாத கெடு கடந்தும்கூட, தமிழ்நாடு அரசு இதை நடைமுறைப்படுத்தவே இல்லை. எனவே, நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கு, ஆகஸ்ட் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், மதுரையில் மட்டும் சிறப்பு தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது" என்றவரிடம், "வழக்கமான வகையில் காவல்துறையில் புகார் கொடுத்தால் போதாதா? இதற்கென தனி பிரிவுக்கான அவசியமென்ன?'' என்றோம்.

"இதற்கு, சிறப்பு தனி பிரிவை சாத்தியப்படுத்திய விமலாதேவி வழக்கில் இருந்தே பதிலளிப்பது சரியாக இருக்கும்" என்ற சாமுவேல்  விரிவாக விளக்கத் தொடங்கினார். 

"பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விமலாதேவியும், எஸ்.சி பிரிவைச் சேர்ந்த திலீப்குமாரும் மனம் இசைந்துபோனதால், காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பெண்ணின் பெற்றோருக்கோ சாதி தடையாக இருந்தது. துரத்தினர். காதல் தம்பதிகள் கேரளாவில் உள்ள பட்டாம்பி சென்று வாழ்ந்து வந்தனர். பெண்ணின் பெற்றோரோ தேடிக் கண்டுபிடிக்க, தம்பதியினர் அங்கிருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பெண்ணின் குடும்பத்துடன் சென்ற உசிலம்பட்டி காவல்துறை, 'நாங்கள் தம்பதியரை விசாரித்துவிட்டு இங்கேயே பத்திரமாக திரும்ப சேர்க்கிறோம்' என்று உறுதி கொடுத்து அழைத்துச் சென்றனர். தமிழ்நாட்டுக்குள் அழைத்து வந்த பிறகு விமலாதேவியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமுவேல்திலீப்குமாரும் பிரிக்கப்பட்டனர். ஒரு வாரத்தில், மறு திருமணத்துக்காக விமலாதேவிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. காதலின் வீரியம், அங்கிருந்து விமலாதேவியை தப்பிக்க வைத்து, தமது கணவர்  திலீப்குமாருடன் மீண்டும்  சேர்த்தது. அவர்கள் இப்போது வத்தலகுண்டு போனார்கள். சாதிய கழுகுகளாய் அங்கேயும் அவர்களைத் தேடி கண்டுபிடித்தது பெண்ணின் குடும்பம். அங்குள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர் காதல் தம்பதிகள். இருவருமே 'நாங்கள் மனம் விரும்பி திருமணம் செய்துகொண்டோம்' என்று கூறியும் காவல்துறை வலுக்கட்டாயமாக அவர்களை பிரித்து, விமலாதேவியைக் காப்பகத்துக்கு அனுப்பியது. சில நாள்களிலேயே விமலாதேவி, தன் பெற்றோர்களால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு, மயானத்தில் எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்தார். 

சாதி ஆணவக் கொலைகளில் பெரும்பாலான காக்கிகளின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.  கடந்த  2 ஆண்டுகளில் 182 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக கணக்குகள் கிடைத்துள்ளன. எனவேதான் தனி சிறப்பு சட்டம் இயற்ற சட்டரீதியான போராட்டங்களைத் தொடங்கினோம். இதன் தொடர்ச்சியாக சேலம் முதல் சென்னை வரை எங்கள் இயக்கம், நடைப்பயணம் மேற்கொண்டது. நடப்பாண்டு ஜூன் 29-ம் தேதி தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினோம். இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் சிறப்பு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இருந்தாலும்  தமிழ்நாடு முழுக்க இந்த சிறப்புப் பிரிவு தொடங்கப்பட வேண்டும். அதற்கான சட்டவழி மற்றும் சமூகப் போராட்டங்களைத் தொடர்வோம்" என்றார் உறுதியான குரலில்.

'உண்மை காதல்னா சொல்லு உயிரைக்கூட தருவேன்' என 'ஷாஜகான்' திரைப்படத்தில் விஜய் கூறுவார். இனி மதுரை மண்ணைச் சேர்ந்த காதலர்கள் உண்மைக் காதலாக இருந்தால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கருதினால், 0452-234602 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு போன் பேசலாம். அரசே, காதலர்களுக்கு பாதுகாப்பு தருவதோடு இல்லாமல், அவர்கள் பெற்றோர்களிடமும் பேசி அவர்களுக்குப் புரிய வைத்து, சம்மதம் வாங்கும்  பணிகளையும் தொடங்குகிறது. இது முழுமையாக சாத்தியமானால், மண்ணிலேயே காதலர்களுக்கு இனி சொர்க்கம்  சாத்தியம்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!