நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை... எதிர்ப்பு தெரிவித்த எம்.பி-க்கள் | Thambidurai speaks tamil in Loksabha

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (09/08/2017)

கடைசி தொடர்பு:14:30 (09/08/2017)

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை... எதிர்ப்பு தெரிவித்த எம்.பி-க்கள்

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க அம்மா அணியின் எம்.பி. தம்பிதுரை தமிழில் பேசியதற்கு, மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிதுநேரம் அமளி நிலவியது. 


'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டுவிழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மக்களவையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-யுமான தம்பிதுரை, 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல்வேறு தரப்பினரும் இணைந்து போராடினர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது' என்று தமிழில் பேச்சைத் தொடங்கினார்.

தம்பிதுரை தமிழில் பேசுவதற்கு முன்னதாகவே மொழிபெயர்ப்பு அனுமதிக்காக நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி, மற்ற மாநில எம்.பி-க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப்  பதிலளித்து ஆங்கிலத்தில் பேசிய தம்பிதுரை, 'தமிழ், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாக மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்' என்று  பேசினார்.