வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/08/2017)

கடைசி தொடர்பு:17:40 (09/08/2017)

வெள்ளத்தில் மிதந்த கார்... மீட்கப்பட்டவரின் திக்திக் நிமிடங்கள்!

வெள்ளம், flood

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான டெக்சாஸ், கடந்த சில நாள்களாக வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு பெய்துவரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இதனால், டெக்சாஸ் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் மீட்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸின், சான் ஆன்டோனியோ பகுதியில் தனது அலுவலகத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் வெள்ளத்தில் சிக்கினார். மழை நீரில் அவர் கார் பழுதாகி நின்றபோது நீரின் அளவு ஓர் அடியாக இருந்தது. சிறிது நேரத்திலேயே வெள்ளநீர் காரைச் சூழ்ந்தது. ஒருகட்டத்தில் தான் தப்பிப்பதற்காக காரின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டார் அந்த நபர். கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கத் தொடங்க... சம்பவ இடத்துக்கு விரைந்தனர் மீட்புப் படையினர். காரின் மேல் சுமார் 45 நிமிடத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடிய அந்த நபரை மீட்பதற்கு எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, தீயணைப்பு வாகனத்தில் இணைக்கப்பட்ட நீளமான இரட்டை ஏணி, காரின் மேற்கூரை அருகே நிலை நிறுத்தப்பட்டது. அதன் உதவியால், வெள்ளத்தில் சிக்கிய அந்த நபர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.