'உங்களுக்காகக் காத்திருப்பேன் செங்கோட்டையன்'! - அன்புமணியின் அடுத்த அழைப்பு | 'I will wait for you Sengottaiyan',says Anbumani

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (09/08/2017)

கடைசி தொடர்பு:17:41 (09/08/2017)

'உங்களுக்காகக் காத்திருப்பேன் செங்கோட்டையன்'! - அன்புமணியின் அடுத்த அழைப்பு

போருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவதுதான் வீரமா என்று அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, வரும் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெறும் விவாதத்தில் உங்களின் வருகைக்காகக் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீராவேசமாகப் பேசுவதும், விவாதத்துக்கு வாருங்கள் என்று அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுவதும்தான் திராவிடக் கட்சித் தலைவர்களின் வீரம் போலிருக்கிறது. பள்ளிக் கல்வித்துறைச் செயல்பாடுகள் குறித்து தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று ஆவேசமாகச் சவால் விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் அதை ஏற்று விவாதிக்க அழைத்தால் பதுங்கி ஓடுவது அதைத்தான் காட்டுகிறது. பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் பற்றி விவாதம் நடத்தத் தயாரா என அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட நான், அவரது விருப்பப்படியே வரும் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் விவாதம் நடத்தலாம் என்று அறிவித்திருந்தேன். அதில் பங்கேற்க வரும்படி அமைச்சர் செங்கோட்டையனையும் அழைத்திருந்தேன். ஆனால், இதுகுறித்து பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன்,‘‘ அவர்கள் பேச்சுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்து என்னிடம் பேசட்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

செங்கோட்டையனின் இந்தப் பேச்சு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பேச்சு போன்று இல்லை. தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவனின் பேச்சு போன்றுதான் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்த வரும்படி அமைச்சர் செங்கோட்டையனை நான் விவாதத்துக்கு அழைக்கவில்லை. ஆசிரியர்கள் இடமாற்றத்தில் நடைபெற்ற ஊழல்கள், அந்த ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய செங்கோட்டையனும் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பா.ம.க சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாற்றுகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன்தான் அதுபற்றி அவருடன் விவாதம் நடத்தத் தயாரா என்று சவால் விடுத்திருந்தார். நானும் அதை ஏற்று விவாதத்துக்குத் தயார் என்றும், அதற்கான தேதி மற்றும் இடத்தை அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். ஆனால், அதற்கான ஏற்பாடுகளைக்கூட செய்யாத செங்கோட்டையன், இடம், தேதி ஆகியவற்றை நானே முடிவுசெய்து ஏற்பாடுகளைச் செய்தால் அதில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

அதுவரை என்னுடன் விவாதிக்கவும், எனது பேச்சுக்கு பதில் கூறவும் தயாராக இருந்த அமைச்சருக்கு, இப்போதுதான் என் மீது வழக்கு இருப்பது குறித்த ஞானோதயம் பிறந்திருக்கிறது போலிருக்கிறது. என்மீது வழக்கு இருப்பது உண்மைதான். அது விதிமீறல் குறித்த அடிப்படை ஆதாரமற்ற பொய்வழக்கு ஆகும். மருத்துவக் கல்லூரிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த அனுமதி சரியானது என்று உச்ச நீதிமன்றமே கூறிய பிறகு, பழிவாங்கவே என்மீது வழக்குத் தொடரப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை குறித்த விவாதத்துக்கு இது எந்த வகையில் தடை என்பது எனக்குத் தெரியவில்லை. 1991-96 காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்காக செங்கோட்டையன் மீது 3 வழக்குகள் தொடரப்பட்டதும், அவற்றில் இரு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2001 பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதும், பின்னர், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வழக்குகளிலிருந்து அவர் எப்படி விடுதலையானார் என்பதும் உலகமறிந்த வரலாறு. அவைபற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடத்த வரும்படிதான் நான் அழைக்கிறேன்.

4,000 ஆய்வக உதவியாளர்களை நியமித்தது 13,000 ஆசிரியர்களுக்குக் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் வழங்கியது ஆகியவற்றை மிகவும் நேர்மையாகச் செய்ததாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார். உண்மைதான். இந்த இரு விஷயங்களிலும் ஊழல் நடக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதற்கெல்லாம் காரணம் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தான்... செங்கோட்டையன் அல்ல என்பதே எனது வாதம். உதயச்சந்திரன் நேர்மையாகச் செயல்படுவதால் ஊழல் செய்ய முடியவில்லை என்பதால் அவரை மாற்றத் துடிக்கிறீர்கள் என்பதுதான் என் குற்றச்சாற்று.

13,000 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கிய செங்கோட்டையன் இப்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும் அதேபோல் கலந்தாய்வு நடத்தாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு இடமாறுதல் ஆணை வழங்குவது ஏன்? என்பதுதான் எனது வினா. இதுகுறித்து விவாதிப்பதற்காகவே அமைச்சரை அழைக்கிறேன். என் மீதான குற்றச்சாற்று ஏதேனும் இருந்தால் அதை விவாதத்தின்போது  முன் வைக்கலாம். அதற்கு விளக்கமளிக்கிறேன். அதை விடுத்து ஒன்றும் பெறாத காரணங்களைக் கூறி விவாதத்துக்கு வராமல் புறமுதுகிட்டு ஓடுவது வீரமல்ல... நேர்மையும் அல்ல. செங்கோட்டையன் உண்மையாகவே நேர்மைத் திலகமாக இருந்தால் வெளிப்படையான முறையில் விவாதிக்கலாம், அதன் மூலம் தமிழக அரசியலில் ஆக்கபூர்வமான கலாசாரத்தை ஏற்படுத்தலாம். இந்த விவாதம் கல்வித்துறை வளர்ச்சி சார்ந்ததுதானே தவிர, தனிநபர்களின் வெற்றி தோல்விக்கானது அல்ல. அதனால், வரும் 12-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெறும் விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் வருகைக்காகக் காத்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.