Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலூர் கமிஷனர் சிக்கியது எப்படி?' போலீஸ் வலையில் சிக்கிய 'அந்த நிமிடங்கள்'

 

வேலூர் மாநகராட்சிக்கு மாற்றலாகி வந்த கமிஷனர் குமார் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் சிட்டியாக வேலூர் மாற்றப்பட்டவுடன் தஞ்சாவூரிலிருந்து இங்கு இடமாறுதல் பெற்றுவந்ததாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

 லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகம் அரசு அலுவலகம் ஒவ்வொன்றிலும் இடம்பிடித்திருந்தாலும் அதைப் பெரும்பாலான அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. லட்சங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் ஏனோ சிக்குவதில்லை. ஆனால், ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குபவர்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் எளிதாகச் சிக்கிக்கொள்கின்றனர். 
 வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அன்றாட அலுவல்கள் தொடங்கின. மாநகராட்சி கமிஷனர் அறைக்குச் சென்றார் கான்ட்ராக்டர் பாலாஜி. அவர் சென்ற சிறிது நேரத்தில் அடுத்தடுத்து அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.டி.கார்டை எடுத்து கமிஷனரிடம் காட்டியபடி அவரது கையிலிருந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றினர். இன்னொரு அதிகாரி அந்த சம்பவத்தை அப்படியே வீடியோ பதிவு செய்தார். இவையெல்லாம் நொடிப்பொழுதில் முடிவடைந்துவிட்டன. இந்தச் சம்பவத்தைக் கண்டு மாநகராட்சி கமிஷனர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். 
 இதையடுத்து அந்த அறையிலேயே முதற்கட்ட விசாரணை நடந்தது. விசாரணை முடிந்தவுடன் கமிஷனர் குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கமிஷனர் குமார் மீதான குற்றச்சாட்டு என்பது டெங்கு ஒழிப்புப் பணிக்கான பணத்தை கொடுக்க இரண்டு சதவிகிதம் கமிஷன் கேட்டது என்று சொல்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். 
 இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், "வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசுவை ஒழிக்க கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் சுகாதாரப்பணிகள் நடந்துள்ளன. இந்தப் பணிகளை வேலப்பாடியைச் சேர்ந்த மாநகராட்சி கான்ட்ராக்டர் பாலாஜி மேற்கொண்டுள்ளார். அவருக்கு மாநகராட்சி 10.20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கொடுக்க கமிஷனர் குமாருக்கு இரண்டு சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது. முதலில் பணம் கொடுக்க பாலாஜி மறுத்துள்ளார். இதனால் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. 
 இந்தத் தகவலை பாலாஜி எங்களிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்த தகவலை விசாரித்தபோது அது உண்மை என்பது தெரியவந்தது. மேலும், கமிஷனர் குமார் மீது பல குற்றச்சாட்டுகளும் மாநகராட்சி வட்டாரத்தில் சொல்லப்பட்டது. உடனடியாக இந்தத் தகவல் எங்களது உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் குமாரை கையும் களவுமாகப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இதன்பிறகு பாலாஜி, கமிஷனர் குமாரைத் தொடர்புகொண்டு கமிஷன் தொகையைக் கொடுப்பதாகத் தெரிவித்தார். அதன்படி எங்களிடமிருந்து ரசாயன கலவைத் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற பாலாஜி, கமிஷனர் குமார் அறைக்குச் சென்றார். அவரது நடவடிக்கைகளை மாநகராட்சி வளாகத்தில் இருந்தபடியே கண்காணித்தோம். பாலாஜி சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு நாங்களும் அதிரடியாக கமிஷனர் அறைக்குள் புகுந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி கமிஷனர் குமார் எங்களிடம் சிக்கிக்கொண்டார்" என்றனர். 

வேலூர் மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். "தஞ்சாவூரிலிருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கமிஷனராக குமார் இங்கு வந்தார். குமார், நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரியில்லை. அவர் பதவி உயர்வு மூலம் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சிக்கு கமிஷனராக அவர் வந்த சமயத்தில் உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் ஒன் மேன் ஆர்மியாக கமிஷனர் குமார் செயல்படத் தொடங்கினார். மாநகராட்சியில் எந்த முடிவையும் கமிஷனர் மற்றும் அவருக்கு வேண்டப்பட்ட சில அதிகாரிகளே எடுத்தனர். மாநகராட்சியில் எந்தப் பணிகளுக்காகச் சென்றாலும் சம்பந்தப்பட்டவர்களைக் கவனிக்கவில்லை என்றால் அந்தக் காரியம் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ அமைதியாக இருந்தனர். 
 மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், அதிகாரிகளின் அடாவடி அதிகமானது. நேர்மையான அதிகாரிகள் எதையும் கண்டுக்கொள்வதில்லை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று பணத்தாசைப் பிடித்த அதிகாரிகள் முடிந்தளவுக்கு மக்களிடமிருந்து கையூட்டுப் பெற்றுவந்தனர். குறிப்பாக, மாநகராட்சிப் பணிகளுக்கான கமிஷன் தொகையை அதிகாரிகளே பங்கு போட்டுக்கொண்டு வந்தனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்பதால் சில அதிகாரிகளின் செயல்பாடுகள் அளவுக்கு மீறிப்போனது. 
 இந்தச் சமயத்தில்தான் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிக்கான பணத்தை கான்ட்ராக்டர் பாலாஜிக்குக் கொடுப்பதில் பிரச்னை எழுந்தது. பாலாஜியிடமும் அதிகாரிகள் கமிஷன் கேட்டனர். இரண்டு சதவிகிதம் கொடுப்பதாக பாலாஜி ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கமிஷனரைச் சிக்க வைப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை" என்றனர். 
 
 பெயரைக்குறிப்பிட விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர், "கமிஷனர் குமாருக்கு மேல்மட்ட செல்வாக்கு அதிகமுள்ளது. குறிப்பாக மன்னார்குடி குடும்பத்தினருடன் நட்பு இருந்தது. ஸ்மார்ட் சிட்டியாக வேலூர் தேர்வு செய்யப்பட்டதும், அங்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கும். இதனால் தஞ்சாவூரிலிருந்து குமார், வேலூருக்கு இடமாறுதல் வாங்கினார். அவர் வந்த சமயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டது. இதனால், அவர் இஷ்டம்போல செயல்பட்டார். உப்பு தின்றவன் ஒருநாள் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்பதைப்போல கமிஷனர் குமாரும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியுள்ளார். அவர், பதவியிலிருந்த காலத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், அதை செய்த கான்ட்ராக்டர்களிடம் விசாரித்தால் குமார் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும்" என்றார். 
 
 கமிஷனர் அறையில் சில மாற்றம் 

 வழக்கமாக மாநகராட்சி கமிஷனர் அறையின் கண்ணாடி கதவுகள் போடப்பட்டுருக்கும். குமார், வேலூர் மாநகராட்சிக்கு கமிஷனராக குமார் வந்ததும் கண்ணாடி கதவை மாற்றினாராம். இதனால் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாதாம். அடுத்து, வேலூர் மாநகராட்சியில் கிடப்பில் கிடந்த பணிக்கான ஆர்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர, அவசரமாகப் பணிக்கான ஆர்டர் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

 கண்காணிப்பு கேமரா 

 கமிஷனராக குமார், பதவியேற்றதும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதியோடு கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது வேதனையாக இருப்பதாகச் சொல்கின்றனர். மேலும், மாநகராட்சிக்கு அவர் வந்த பிறகு, அதிகாரிகள் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close