Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"உருகிய ஸ்டாலின்...நெருங்கிய வைகோ!”- பாசப் பின்னணி

ஸ்டாலின் வைகோ

கொலைப்பழி சுமத்தி, தி.மு.க-வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டதிலிருந்து, இரு கட்சிகளுக்கும் இடையே ஆத்மார்த்தமான நெருக்கம் இருந்ததில்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.க-வோடு வைகோ கூட்டணி வைத்திருந்த நேரத்தில் எல்லாம் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததுபோலவே அவர்கள் உறவு இருந்து வந்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குள் வைகோவைக் கொண்டுவரும் வேலைகள் நடந்தன. மு.க.தமிழரசு மகன் அருள்நிதி கல்யாணத்தை முன்வைத்து தேர்தல் உறவுக்கான பேச்சுகள் நடந்தன. மு.க.ஸ்டாலின், அண்ணாநகர் வீட்டுக்கே போய் வைகோவுக்குத் திருமண அழைப்பிழைக் கொடுத்தார். அந்தத் திருமணத்துக்கு வைகோ போனார். அங்கே அவரை உரிய மரியாதையுடன் வரவேற்கவில்லை என்றும் மேடையில் முன்வரிசையில் இடம் தரவில்லை என்றும் ம.தி.மு.க நிர்வாகிகள் வருத்தப்பட்டனர். அந்த மேடையிலேயே வைகோ பொங்கி எழுந்து பேசினார். மேலும், தொழிற்சங்கக் கட்டடப் பிரச்னை ஒன்றும் இரு கட்சிகளுக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக இருந்தது. அதுவும் இரு கட்சிகளின் உறவுக்கும் இடையூறாக இருந்தது.

 

எனவேதான், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கத்தை மக்கள் நலக் கூட்டணி ஆக்கி, அதில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா என்று அணி சேர்த்து தேர்தலைச் சந்தித்தனர். குறிப்பாக, இந்த அணியில் விஜயகாந்த் சேர்ந்தது தேர்தல் களத்தில் தி.மு.க-வுக்குப் பின்னடைவைக் கொடுத்தது. ஒன்றரை சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைத் தி.மு.க இழந்தது. தேர்தல் முடிந்த பிறகு சிகிச்சைக்காக ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வைகோ கொடுத்த பேட்டிகள் தி.மு.க-வுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. அதனால்தான், கருணாநிதி உடல்நலம் இல்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரைப் பார்க்கச் சென்ற வைகோவைத் தி.மு.க-வினர் விரட்டியடித்தனர். கல்வீச்சும் நடந்தது.

 

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம், பெங்களூரு சிறையில் சசிகலா... என்று அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள், அரசியல் கட்சிகளைத் திசை மாறவைத்தன. கருணாநிதி பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழாவில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர். வைகோவும் அமைதியாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் வைகோ, மலேசியாவில் கைதுசெய்யப்பட்டபோது அதைக் கண்டித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். 

 

அதில், ''ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ-வை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைதுசெய்திருப்பதற்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பினாங் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இல்லத் திருமணத்துக்குச் சென்றவரை 'ஆபத்தானவர்' என்றெல்லாம் கூறி முறைப்படி விசா பெற்றுச்சென்றவரை மலேசிய அரசு கைதுசெய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும் அராஜக நடவடிக்கையுமாகும். இந்திய நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஓர் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ கைதுபற்றி மத்திய அரசும் உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது. ஆகவே, இந்திய வெளியுறவுத் துறை, மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து வைகோவைக் கைதுசெய்ததற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரைக் கெளரவமாக நடத்திட தக்க நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

வைகோ கருணாநிதி

 

இப்படி, 'அண்ணன் வைகோ' என்று உருகிய ஸ்டாலினின் அந்த அறிக்கை வைகோ மனதைக் கரைத்தது. அதன்பிறகு, '' 'முரசொலி' பவளவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்'' என்று வைகோவிடம் தி.மு.க தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு வைகோ, ''முடியாது'' என்று சொன்னாலும், மிகவும் அன்புடன் தி.மு.க-வுக்குப் பதில் கடிதம் எழுதி அதில் சில விவரங்களைச் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வைகோவிடம்... சமீபத்தில், ''எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகள்'' பற்றி நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, ''எதிர்க் கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டுமோ, அதை ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார்'' என்று சொல்லியிருந்தார். ஸ்டாலினை பாராட்டும் வகையில், வைகோ பேட்டி அளித்திருந்தது அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகப் பார்க்கப்பட்டது. அதாவது, தி.மு.க. - ம.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் நெருங்கி இணைந்து வருவதையே இது சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்நிலையில், முரசொலி பவளவிழாவுக்கு வைகோ பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். 

 

ஜெயலலிதா மரணமும் கருணாநிதியின் உடல்நலக் குறைவும் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை நிகழ்த்திவருகின்றன. அந்த வகையில், எதிரும் புதிருமாக இருந்த வைகோவும் மு.க.ஸ்டாலினும் நெருங்கிவிட்டார்கள் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement